Kathir News
Begin typing your search above and press return to search.

சாக்கடை கால்வாயில் கட்டு கட்டாக மிதந்து வந்த ரூபாய் நோட்டுகள் - பாய்ந்த அள்ளிய பொதுமக்கள்!

பீகாரில் சாக்கடை கால்வாயில் கட்டு கட்டாக மிதந்து வந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் பாய்ந்து அள்ளினர்.

சாக்கடை கால்வாயில் கட்டு கட்டாக மிதந்து வந்த ரூபாய் நோட்டுகள் - பாய்ந்த அள்ளிய பொதுமக்கள்!

KarthigaBy : Karthiga

  |  8 May 2023 3:30 AM GMT

மீன் விற்ற காசு நாறுமா? நாய் விற்ற காசு குரைக்குமா ? என்பதைப் போல பணம் சாக்கடையில் மிதந்து வந்தால் என்ன ?அதன் மதிப்பு குறைந்து போகுமா என்று கேட்கிறார்கள் பீகார் மக்கள் . அதனால் தான் சாக்கடையில் பணம் மிதந்து வருவதைக் கண்டதும் தயங்காமல் பாய்ந்து அள்ளி இருக்கிறார்கள். பீகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் ஒரு சாக்கடை கால்வாயில் ரூபாய் மூட்டைகள் போடப்பட்டிருந்ததை நேற்று முன்தினம் காலை சிலர் கண்டதாக கூறப்படுகிறது. உடனே அவர்கள் சாக்கடைக்குள் இறங்கி பணக்கட்டுகளை கைப்பற்ற தொடங்கினர்.


அப்போது கட்டுகள் பிரிந்து சாக்கடையில் ரூபாய் தாள்கள் மிதந்து பரவின . சில பணத்தாள்கள் சாக்கடை சேற்றுக்குள் அமிழ்ந்தன.ஆனாலும் மீன்பிடிப்பது போல பலரும் சாக்கடையைத் துழாவி பணத்தை திரட்டினர். தகவல் அறிந்து மேலும் ஏராளமானோர் அங்கு வந்து சாக்கடைக்குள் பாய்ந்தனர். தங்களால் முடிந்தவரை ரூபாய் நோட்டுகளை சேகரித்துக் கொண்டு உடம்பெங்கும் வீசிய சாக்கடை மணத்தை பொருட்படுத்தாமல் கரன்சி மணத்தில் மனமகிழ்ந்து கரையேறினர் .


2000, 500 ,100,10. ரூபாய் நோட்டுகள் சாக்கடையில் மிதந்து வந்ததாக நேரில் பார்த்தவர்களும் அவற்றை திரட்டியவர்களும் கூறினர். அவை எல்லாமே கள்ள நோட்டுகள் அல்ல . நல்ல நோட்டுகள் தான் என்றும் அவர்கள் உறுதி தெரிவித்தனர் .இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக பரவியது. அது குறித்து பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்தனர் .


கொஞ்ச நாளைக்கு பொது இடங்களில் சில்லறையாக பணத்தை வாங்கி பயன்படுத்தாதீர்கள். சாக்கடையில் எடுத்த பணம் உலா வரலாம் என்று ஒருவர் எச்சரிக்கை விடுத்தார் .வேறு சிலரோ அதெல்லாம் அசல் ரூபாய் நோட்டுகள் தானா என்று சந்தேகம் எழுப்பினர். இதற்கிடையில் அவை உண்மையான ரூபாய் நோட்டுகள் தானா? அவற்றை சாக்கடையில் போட்டவர்கள் யார் ?என்று மாவட்ட நிர்வாகத்தினர் விசாரித்து வருகிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News