"பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர நினைப்பது பதவி சுகத்திற்கு அல்ல, நாட்டிற்கு உழைக்கவே"- பிரதமர் மோடி!
பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக அல்ல நாட்டின் நலனுக்காக 3-வது முறை ஆட்சி அமைக்க பாஜ விரும்புகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
By : Karthiga
பாரதிய ஜனதா மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க விரும்புவது பதவி சுகத்திற்காக அல்ல, நாட்டிற்கு உழைப்பதற்காகவே. புதிய வாக்காளர்களை சென்றடையவும், அவர்களின் நம்பிக்கையை பெறவும் அடுத்த 100 நாட்கள் பாஜ தொண்டர்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என பா.ஜ .க தேசிய மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பிரதமர் மோடி தொடங்கி வைத்த டெல்லி மாநாட்டில் மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் உட்பட நாடு முழுவதும் இருந்து பாஜ நிர்வாகிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநாட்டின் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி நிறைவுரையாற்றினார். அவர் கூறியதாவது :-
வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, இப்போது தேசம் பெரிய கனவுகளை காண வேண்டும். பெரிய தீர்மானங்கள் எடுக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகள் நமக்கு முக்கியமானதாக இருக்கும். அதில் வளர்ந்த பாரதத்தை நோக்கி மிகப்பெரிய நோக்கத்தை கையில் வேண்டும். அதற்கு முதல் கட்டாயம், மத்தியில் வலுவான எண்ணிக்கையில் பாஜ தலைமையில் மீண்டும் ஆட்சி அமைவதை உறுதி செய்ய வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகள் என்கிற மைல் கல்லை எட்ட வேண்டும் என்றால் பா.ஜ.க 370 தொகுதிகளை கட்டாயம் வெல்ல வேண்டும். உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் இப்போது இந்தியாவுடன் ஆழமான உறவை உருவாக்க விரும்புகின்றன. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் முடியாத நிலையிலும், அடுத்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பல்வேறு நாடுகளுக்கு வர எனக்கு அழைப்பு வந்துள்ளது. இதன் அர்த்தம், உலகெங்கிலும் உள்ள நல நாடுகள் மீண்டும் பா.ஜ.க ஆட்சி வருவதை முழுமையாக நம்புகின்றன.
நாங்கள் 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க முயற்சிப்பது, பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக அல்ல. நாட்டிற்காக உழைப்பதற்காகவே. நான் எனது வீட்டை மட்டும் முக்கியமாக கருதினால் கோடிக்கணக்கான மக்களுக்கு வீடு கட்டித் தந்திருக்க முடியாது. 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது சாதாரண சாதனை அல்ல. ஒரு மூத்த தலைவர் ஒருமுறை என்னிடம், ‘பிரதமராகவும் முதல்வராகவும் போதுமான அளவு உழைத்து விட்டீர்கள். இனி ஓய்வெடுக்க வேண்டியதுதானே’ என்றார். நான் அரசியலுக்கு உழைப்பவன் அல்ல, நாட்டிற்காக உழைப்பவன். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கொள்கைப்படி வாழ்கிறேன். எனது உழைப்புகள் அனைத்து நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இந்தியர்களின் கனவுகள் எனது கடமைகள்.
பா.ஜ.வை கருத்தியல் ரீதியாகவோ கொள்கைகளின் அடிப்படையிலோ எதிர்கொள்வதற்கான தைரியம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. காங்கிரஸ் நம்பிக்கை இழந்துவிட்டது. எனவே, என் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பது காங்கிரஸ் தலைவர்களின் ஒற்றை புள்ளியாகி விட்டது. புதிய வாக்காளர்களை சென்றடையவும், அவர்களின் நம்பிக்கையை பெறவும் அடுத்த 100 நாட்கள் பா.ஜ.க தொண்டர்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
SOURCE :Tamil.abplive.com