குடிகாரர்களின் கூடாரமாகும் கோவில் நிலம் - பக்தர்கள் வேதனை!
கோவில் சொத்தான 5 ஏக்கர் நிலத்தில் திருப்பூர் கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறநிலையத் துறையினர் கூறியதை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகள் அகற்றப்பட்டது.
By : Shiva
திருப்பூரில் பராமரிப்பில்லாமல் இருக்கும் கோவில் நிலத்தை சமூக விரோதிகள் "பார்" போல பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்த நிலையில் அந்த கோவில் இடத்திற்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி, நொச்சிபாளையம் பகுதியில் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலுக்கு சொந்தமாக 8.99 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் விவசாயிகள் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வந்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு கோவில் சொத்தான 5 ஏக்கர் நிலத்தில் திருப்பூர் கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறநிலையத் துறையினர் கூறியதை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகள் அகற்றப்பட்டது.
தற்போது எந்த பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இந்த கோவில் நிலத்தை சமூக விரோதிகள் பார் போல பயன்படுத்தி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் சட்ட விரோதமான செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால் கோவில் நிலத்திற்கு உடனடியாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கோவில் நலனுக்காக முன்னோர்களால் தானமாக வழங்கப்பட்ட கோவில் நிலங்களை கோவில் சம்பந்தமான செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் இது போல மாற்று நடவடிக்கைகளுக்கு கொடுப்பதன் மூலம் கோவிலின் வருவாய் வெகுவாக குறையும் என்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். கண்ணெதிரே சீரழிந்து வரும் கோவில் நிலத்தை அதிகாரிகள் பாதுகாக்கவில்லை என்றால் பொதுமக்கள் சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Source: மாலைமலர்
Image courtesy மாலைமலர்