எந்தவொரு சவாலையும் சமாளிக்கத் தயார்-பாதுகாப்பு துறை அமைச்சர்!
'டூர் ஆப் டியூட்டி' என்ற புதிய திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம் அறிமுகம் செய்ய உள்ளது
By : Shiva
நாட்டின் பாதுகாப்பில் உருவாகிவரும் சவால்களை சமாளிக்கும் வகையில் இந்தியா தயாராகி வருவதாக மத்திய பாதுகாப்பு துறை ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படை அதிகாரிகள் கல்லூரியில் நடைபெறும் 77வது பயிற்சியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பார்வையிட்டார். அப்போது பயிற்சி பள்ளியில் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துரைக்கப்பட்டது. பிறகு இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ''உலகில் மாறிவரும் பாதுகாப்பு முறைகளை சந்திக்க இந்தியா தயார்'' என்று தெரிவித்தார்.
மேலும் இந்த பயிற்சி மையத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அது பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களின் காரணமாக உலகில் மாறி வரும் பாதுகாப்பு முறைகளை இந்தியா சந்திப்பதற்கு தயாராக உள்ளது என்றும் பாதுகாப்பு படைகள் முழு அளவிலான தளவாடங்களை பெற்றிருக்க வேண்டும் மற்றும் எல்லா நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நமது ஆயுதப்படைகளின் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை இளைஞர்கள் ஏற்றுக்கொள்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். ஆயுதப்படைகளில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுப்பதற்கான 'டூர் ஆப் டியூட்டி' என்ற புதிய திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம் அறிமுகம் செய்ய உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்றாக அமையும். இது ராணுவத்தில் சராசரி வயதைக் குறைப்பதுடன், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவிடம் அனைத்து திறன்களும் இருந்த போதிலும் இதுவரை எந்த எந்த நாட்டையும் தாக்கியது இல்லை என்றும் அதே நேரத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை பாதுகாக்க அரசு உறுதியுடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங்குடன் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, லெப்டினன்ட் ஜெனரல் எம்ஜேஎஸ் காலன் ஆகியோர் பங்கேற்றனர்.
Source : PIB