கோவில் நிலத்தில் பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை- நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை!
Breaking News.
By : Shiva
நீதிமன்ற உத்தரவால் 2300 சதுர அடி கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டுக்கு சீல் வைத்து நிலத்தை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்தக் கோவிலுக்கு சொந்தமாக திருமருகல் ஒன்றியம் பாக்கம் கோட்டூரில் 2300 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து ரூ.60 லட்சம் செலவில் வீடு கட்டி வசித்து வந்துள்ளார்.
ஆக்கிரமிப்பு குறித்து நாகை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவில் நிலத்தை மீட்டு கோவில் செயல் அலுவலர் பொறுப்பில் கொண்டு வர உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நீதிமன்ற அமீனா, கோயில் செயல் அலுவலர், காவல் ஆய்வாளர், வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழு கோவில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். வீட்டின் சாவி கோவில் செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அறநிலையத் துறை இனிமேலாவது கோவில் நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : HinduTamil