Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

ஆகஸ்ட் 24 ஆம் தேதி மாலை 5:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நிறைவடையும்.

இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2020 6:05 AM GMT

ஆகஸ்ட் 24ம் தேதி உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவில் இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கான இடைத்தேர்தல்கள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் நேற்று (ஜூலை 30) அறிவித்தது.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்ய சபா M.P பெனி பிரசாத் வர்மா மார்ச் 27 அன்றும் மற்றும் கேரளாவைச் சேர்ந்த எம்.பி வீரேந்திர குமார் மே 28 அன்றும் இறந்ததால் இந்த இடங்கள் காலியாக இருந்தன. வர்மாவின் பதவிக்காலம் ஏப்ரல் 7, 2022 வரை இருந்தது, குமாரின் பதவிக்காலம் 2022 ஏப்ரல் 2 வரை இருந்தது.

இரண்டு இடங்களிலும் இடைத்தேர்தல்களை அறிவித்த தேர்தல் ஆணையம், தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 13 ஆகும். வேட்புமனுக்கான ஆய்வு ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெறும், வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 17 ஆகும். ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும், ஆகஸ்ட் 24 ஆம் தேதி மாலை 5:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நிறைவடையும்.

அட்டவணைப்படி, ஆகஸ்ட் 26 க்கு முன்னர் இரு மாநிலங்களிலும் தேர்தல் பணிகளை முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்போது, கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான விரிவான அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்ய மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரியை நியமிக்க சம்பந்தப்பட்ட தலைமைச் செயலாளர்களுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சமாஜ்வாடி கட்சியின் நிறுவன உறுப்பினரும், கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவுடன் நெருக்கமாக கருதப்பட்ட வர்மா மார்ச் 27ல் , 79 வயதில் காலமானார். வர்மா 1996 முதல் 1998 வரை அப்போதைய பிரதமர் H.D. தேவேகவுடாவின் அமைச்சரவையில் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், மாத்ருபூமி நிர்வாக இயக்குநருமான எம்.பி வீரேந்திர குமார் மே 28 அன்று கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 84. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மாநிலங்களவை உறுப்பினர் ஜனதா தளம் (S), சோசலிஸ்ட் ஜனதா (D) மற்றும் ஜனதா தளம் (U) முன்னாள் மாநிலக் குழுத் தலைவராக இருந்தார். லோகாந்த்ரிக் ஜனதா தளத்தின் நிறுவனர் தலைவராகவும் இருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News