மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று - தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்!
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
By : Karthiga
இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்று முன்தினம்ட 335 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய 260 ஆக இருந்தது. இதைப்போல கொரோனாவின் புதிய மாறுபாடான ஜே.என்.1 வைரஸ் இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் கண்டறியப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து தொற்று முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது.இது தொடர்பாக மதிய சுகாதாரத் துறை செயலாளர் சுதான்ஷ்பந்த் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான நிலையான மற்றும் கூட்டு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்க முடிந்தது. எனினும் தொற்று தொடர்ந்து பரவி வருவதால் அதை கட்டுப்படுத்துவதில் சவால்களை திறம்பட சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமானது .
கேரளா போன்ற ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் லேசாக அதிகரித்து வருகிறது. எதிர்வரும் பண்டிகை நாட்களை கருத்தில் கொண்டு நோய் பரவும் அபாயத்தை குறைக்க தேவையான பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பிற ஏற்பாடுகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும். மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அடைந்துள்ள கொரோனாவுக்கான திருத்தப்பட்ட கண்காணிப்பு உத்திக்கான விரிவான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை திறம்பட கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதிகரித்து வரும் தொற்றுகளின் போக்கை முன்கூட்டியே கண்டறிவதற்காக அனைத்து சுகாதார நிலையங்களிலும், இன்புளூயன்சா போன்ற கொடுமையான நோய்கள் மற்றும் கடுமையான சுவாச கோளாறு ஆகியவற்றை மாவட்ட வாரியாக கண்காணிக்க வேண்டும். கொரோனா சோதனை வழிகாட்டுதல்களின் படி அனைத்து மாவட்டங்களிலும் போதுமான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
SOURCE :DAILY THANTHI