ஆயுதப்படை வீரர்களின் வாழ்வு மத்திய அரசால் மேம்படும் - ராஜ்நாத் சிங்!
ஆயுதப்படை வீரர்களின் வாழ்வை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக கூறினார்.
By : Karthiga
ஆயுதப்படை வீரர்கள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி உத்தரபிரதேசத்தில் கான்பூர் விமானப்படை தளத்தில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மத்திய இராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.இதில் கலந்துகொண்ட ஆயுதப்படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது தேசத்துக்காக வீரர்கள் ஆற்றி வரும் தன்னலமற்ற சேவைக்காக நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசும் போது அவர் கூறியதாவது:-
'ஒரு பதவி , ஒரே ஓய்வூதியம் திட்டம், சுகாதார திட்டம் மறு வேலை வாய்ப்பு திட்டம் 'என ஆயுதப்படை வீரர்களின் வாழ்வை மேம்படுத்துவதில் மத்திய மோடி அரசு உறுதி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் ஆயுதபடை வீரர்களுக்கு என சிறப்பு இடம் உள்ளது. வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களை தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களாக கருதுவதும் எப்போதும் அவர்களுக்கு துணை நிற்பதை உறுதி செய்வதும் மக்களின் கூட்டு பொறுப்பாகும்.
ஆயுதபடைவீரர்கள் குடும்பம், சாதி, மதம் ஆகியவற்றை கடந்து தேச பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றனர். அவர்களின் துணிச்சல், நேர்மை, மனிதாபிமானம் மற்றும் தொழில் திறமை போன்றவை நாடு முழுவதும் மதிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் பங்கேற்ற நமது வீரர்கள் சர்வதேச அளவில் நினைவுகூர்ந்து மதிக்கப்படுகின்றன .இந்தியர்களாகிய நாம் நமது வீரர்களை மட்டும் இன்றி பிறநாட்டு வீரர்களையும் மதிக்கிறோம். 1971 ஆம் ஆண்டு போரில் 90 ஆயிரத்துக்கு அதிகமான பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர்.
நாம் நினைத்தால் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் முழுமையான மனிதாபிமான அணுகுமுறையை கடைபிடிப்பதே நமது கலாச்சாரம். அதன் அடிப்படையில் அந்த வீரர்களை முழுமையான மரியாதையுடன் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்தோம். எதிரி வீரர்களை இப்படி நடத்துவது மனிதகுலத்தின் பொன்னான அத்தியாயங்களில் ஒன்றாகும். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார். முன்னதாக அங்குள்ள போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து ராஜ்நாத்சிங் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச துணை முதல் மந்திரி பிரதேஷ் பதக் முப்படை தளபதி அணில் சௌகான் மற்றும் விமானப்படை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
SOURCE :DAILY THANTHI