சிதம்பரத்துக்கு சிறையில் அளிக்கப்படும் சின்ன...சின்ன சலுகைகள் எவை? சிறை அதிகாரிகள் தகவல்!!
சிதம்பரத்துக்கு சிறையில் அளிக்கப்படும் சின்ன...சின்ன சலுகைகள் எவை? சிறை அதிகாரிகள் தகவல்!!
By : Kathir Webdesk
பொருளாதார முறைகேடுகள் மற்றும் மோசடிகள் வழக்கில் நீதிபதி, சிதம்பரத்தை வரும் 19-ம் தேதி வரை அதாவது 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். சிறையில் சிதம்பரத்துக்கு தனி அறை வழங்கப்பட வேண்டும் என்றும், உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சிதம்பரத்துக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, திஹார் சிறைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே, திஹார் சிறையில் உள்ள 7-ம் எண் அறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டார். இந்த தனி சிறையில் மேற்கத்திய கழிப்பறை அமைக்கப்பட்டிருப்பதோடு, போதிய பாதுகாவலர்களும் நிறுத்தப்பட்டிருப்பார்கள். மேலும், மூக்குக் கண்ணாடியை மாற்றிக் கொள்ள சிதம்பரம் அனுமதிக்கப்படுவார். இதே அறையில்தான், இதே வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் அடைக்கப்பட்டிருந்தார்.
மேலும், திஹார் சிறையின் விதிப்படி, காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சிதம்பரம் எழ வேண்டும். காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்ட பிறகு, நடைப்பயிற்சிக்கோ, உடல் பயிற்சிக்கோ அனுமதிக்கப்படுவார். மதிய உணவாக ரொட்டி, பருப்புக்குழம்பு அல்லது சப்ஜி ஆகியவை 12 முதல் ஒரு மணிக்குள் பரிமாறப்படும். அவர் தொலைக்காட்சி பார்க்க விரும்பினால் சிறை நூலகத்திற்கு சென்று பார்க்கலாம். இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இரவு உணவு வழங்கப்படும்.
இரவு 9 மணிக்குள் அவர் தனது அறைக்குச் செல்ல வேண்டும். மேலும் அவருக்கு தூய்மை படுத்தப்பட்ட குடிநீரை பாட்டிலில் சென்று பிடித்துக் கொள்ள அனுமதி உண்டு. விரும்பினால் சிறை கேண்டீனில் உள்ள கடையில் பணம் கொடுத்து மினரல் வாட்டர் பாட்டில் வாங்கிக் கொள்ளலாம். வழக்கமான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம், மேற்கத்திய கழிவறையுடன் கூடிய தனி அறை என்பதைத்தவிர வேறு வசதிகள் எதுவுமில்லை, மற்றபடி இதர கைதிகளைப் போலத்தான் வசதிகள் என சிறை அதிகாரிகள் கூறினர்.