சி.பி.ஐ காவலில் 27 ஆண்டுகள் எம்.பி 20 ஆண்டுகள் அமைச்சர் சரிந்த கண்டனூர் சிதம்பரம்!
சி.பி.ஐ காவலில் 27 ஆண்டுகள் எம்.பி 20 ஆண்டுகள் அமைச்சர் சரிந்த கண்டனூர் சிதம்பரம்!
By : Kathir Webdesk
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.இது சிதம்பரத்துக்கு மட்டுமின்றி காங்கிரசுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
20 ஆண்டுகள் மத்திய அமைச்சர் , 27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர், 9 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் என்று இந்திய அரசியலில் பெரும் செல்வாக்கு பெற்று வலம் வந்தவர். ப.சிதம்பரம், 1945-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் கிராமத்தில் பிறந்தவர். தந்தை பழனியப்பன், தாயார் லட்சுமி ஆச்சி.
சிதம்பரம் இளம்வயதாக இருக்கும்போதே கரைக்குடியிலிருந்து அவரது குடும்பம் சென்னையில் குடியேறியது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சிதம்பரம், மாநிலக் கல்லூரியில் பி.எஸ்சி, சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல்., அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டங்களைப் பெற்றார். வழக்கறிஞர் பி.எஸ்.கைலாசத்திடம் பயிற்சி வழக்கறிஞராக சேர்ந்தார். கைலாசத்தின் மகள் நளினியை காதலித்து 1968-ல் திருமணம் செய்துகொண்டார்.
1967-ல் ‘சுதேசமித்திரன்' நாளிதழில் உதவி ஆசிரியராகவும் சிதம்பரம் பணியாற்றியுள்ளார்.
1972 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார். 1973-1976 இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக செயல்பட்டவர், 1976-1977 ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளரக இருந்தார் .காங்கிரஸ் 1985 ஆம் ஆண்டு அகில இந்திய இணைச் செயலாளர் என காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளை வகித்து பெரும் புள்ளியாக வலம் வந்த சிதம்பரம் தற்போது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராகவும், காரிய கமிட்டி உறுப்பினராகவும் இருக்கிறார்.
1984, 1989, 1991, 1996, 1998, 2004, 2009 என 7 முறை சிவகங்கை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 மக்களவைத் தேர்தலில் தமாகா - விசிக - புதிய தமிழகம் கூட்டணியில் போட்டியிட்ட ப.சிதம்பரம், காங்கிரஸ் - அதிமுக கூட்டணி வேட்பாளர் சுதர்சன நாச்சியப்பனிடம் தோல்வி அடைந்தார். தேர்தல் அரசியலில் சிதம்பரத்தின் முதல் தோல்வி இது. 2014 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதி, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஒதுக்கப்பட்டது. அதனால், அவர் போட்டியிடவில்லை. அதைத் தொடர்ந்து 2016 ஜூலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1984-ல் முதல்முறையாக எம்.பி.யான சிதம்பரம், 1985-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அமைச்சரவையில் வர்த்தகத் துறை துணை அமைச்சரானார். 1986 முதல் 1989 வரை மத்திய இணை அமைச்சராக பதவியில் இருந்தவர் , பணியாளர் நலன், நிர்வாக சீர்திருத்தம், உள்துறை போன்ற பல்வேறு துறைகளை கவனித்தார். 1991 முதல் 1996 வரை நரசிம்ம ராவ் அமைச்சரவையில் வர்த்தகத் துறை இணை அமைச்சராக இருந்தார்.
1996-ல் அதிமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்த ஜி.கே.மூப்பனார், தமாகா என்ற தனிக் கட்சியை தொடங்கினார். இதற்கு சிதம்பரம் முக்கிய காரணமாகவும், உறுதுணையாகவும் இருந்தார். 1996-ல் திமுகவுடன் கூட்டணி அமைத்த தமாகா, 20 எம்.பி.க்களைப் பெற்றது. தேவகவுடா தலைமையிலான அமைச்சரவையிலும், ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவையிலும் மத்திய நிதி அமைச்சராக சிதம்பரம் பணியாற்றினார்.
1999-ல் அதிமுக – தமாகா கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது திமுக கூட்டணியில் பா.ஜ.க வும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 2004-ல் மீண்டும் காங்கிரஸில் இணைந்த சிதம்பரம், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிதி, உள்துறை போன்ற முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்தார். 2014 தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியாமல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
பா.ஜ.க ஆட்சி அமைந்ததும், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக அந்நிய முதலீடு பெற நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்தான் அவருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டது.
பன்முகத்தன்மை
ப.சிதம்பரத்தின் ஒரே மகன் கார்த்தி சிதம்பரம், தற்போது சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருக்கிறார். அவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. ஐ.என்.எக்.ஸ் மீடியா வழக்கில் கடந்த 2018-ல் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி, இவரை கடுமையாக விமர்சித்திருந்தாலும், பாராட்டவும் செய்துள்ளார்.
ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அம்மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மீது குஜராத் கலவர வழக்கு, போலி என்கவுன்ட்டர் வழக்கு ஆகியவற்றில் சி.பி.ஐ தனது பிடியை இறுக்கியது. அமித்ஷா கைது செய்யப்பட்டு அமைச்சர் பதவியை இழந்தார். குஜராத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
அன்று ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சர். சிபிஐ பி டியில் அமித்ஷா இருந்தார். இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சர். சிபிஐ பிடியில் ப.சிதம்பரம் சிக்கியுள்ளார்.
பலமுறை பிரதமர் பதவிக்கு பேசப்பட்டவர் ப.சிதம்பரம். ஆனால், அது கைகூடவில்லை. தற்போது 2-வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சிக்கு வந்துள்ளதால் சிதம்பரம் மீதான வழக்குகள் வேகம் பெற்று அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இது அவருக்கு மட்டுமல்ல, காங்கிரஸுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சாம்ராஜ்ஜியம் சரிந்தது