இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்களில் வலை விரிக்கும் சீனாவின் சூழ்ச்சிகள் : அசராமல் முறியடிக்கும் இந்தியா.!
இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்களில் வலை விரிக்கும் சீனாவின் சூழ்ச்சிகள் : அசராமல் முறியடிக்கும் இந்தியா.!

சீனாவுக்கு என்று ஒரு மூலோபாயம் உள்ளது, அதன்படி அது அருணாசலப் பிரதேசம், சிக்கிம், பூடான், நேபாளம் மற்றும் லடாக் பிரதேசங்களை திபெத்தை கைப்பற்றியது போல கைப்பற்றுவது அதன் குறிக்கோள் என்று நம் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் சீனாவின் இலக்காக உள்ள அந்தப் பகுதிகள் இந்தியாவுக்கு உட்பட்டதாகவும் அல்லது இந்தியப் பாதுகாப்புக்கு உட்பட்டதாகவும் உள்ளதால் சீனா இந்தியாவின் மீது விரோதமாகவே உள்ளது. எந்தெந்த வழிகளில் இந்தியாவுக்கு தொல்லை கொடுக்க முடியுமோ அத்தனை வழிகளிலும் தொல்லை கொடுத்து வருகிறது.
இந்திய எல்லையோரப்பகுதிகளில் அடிக்கடி பதற்றம் ஏற்படுத்துதல், இந்திய வட கிழக்கு மாநில பிரச்சினைகளில் மூக்கை நுழைத்து அங்கு கிளர்ச்சிக் குழுக்களை உருவாக்கி வகுப்பு மோதல்களை உருவாக்குதல், கிழக்கு மாநிலங்களில் நக்சலைட் இயக்கங்களுக்கு உதவி செய்து அதன் மூலம் இந்தியாவின் நிம்மதியை கெடுத்தல், நாடு முழுவதும் பரவியுள்ள மாவோ வலது கம்யூனிஸ்டுகளுக்கு உதவி அதன் மூலம் சமூக புரட்சிகளை ஏற்படுத்துவது இப்படி பல விதங்களில் இந்தியாவுக்கு தொல்லை அளித்து வருகிறது.
இந்தியாவின் வட கிழக்கு எல்லைகளில் டோக்லாம், கிழக்கு லடாக் போன்ற இடங்களில் சீனா இந்தியாவுக்கு எப்படியெல்லாம் நமக்கு தொந்தரவு அளித்து வருகிறது என்பது நமக்கு நன்றாக தெரியும். குறிப்பாக அருணாச்சலப் பிரதேச எல்லையில் நடைபெற்ற டோக்லாம் பிரச்சினை, சமீபத்தில் கிழக்கு லடாக் பகுதிகளில் நடக்கும் கல்வான் பிரச்சினை, நேபாளத்தை தூண்டி விட்டு இருநாடுகளுக்கிடையே தூண்டி வரும் எல்லைப் பிரச்சினைகள் இவை எல்லாம் இந்தியாவை நிம்மதி இழக்க வைக்கும் அதன் உபாயங்களாகும்.
இந்த பிரச்சினைகள் போதாதென்று வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம், மணிப்பூர் பகுதிகளில் இந்தியாவுக்கு எதிராக கிளர்ச்சிகள் செய்து வரும் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வருவதுடன், அவ்வப்போது மியான்மர் நாட்டின் மறைவிடங்களுக்கு சென்று ஆயுத பயிற்சிகள் பெறும் அவர்கள் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவவும் உதவி செய்து வந்ததாக தற்போது ஆதாரங்கள் வந்துள்ளன.
சென்ற மாதம் 15 ஆம் தேதி மியான்மர் அரசு தன் நாட்டு கிளர்ச்சியாளர்களான அரக்கன் ஆர்மியின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மறைந்து கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 22 வடகிழக்கு பிரிவினை தீவிரவாதிகளை தேடிப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைத்தது. அவர்களில் 12 பேர் மணிப்பூரில் செயல்படும் பிரிவினைவாத குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் 10 பேர் அசாமில் உள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள்.
ஆனால் பிடிபட்ட இந்த 22 பேரில் ஒருவர் கூட இந்த இயக்கங்களின் உயர்மட்ட தலைவர் இல்லை. குறிப்பாக உல்பா இயக்க தலைவன் அபிஜித் பர்மன், அந்த அணியின் தளபதி பரேஷ் பருவா, நிதிச் செயலாளர் ஜிபோன் மோரன் மற்றும் மணிப்பூரின் மக்கள் விடுதலை இராணுவம் இயக்க தலைவன் ஐரெங்க்பாம் சோரன் ஆகியோர் இன்னும் பிடிபடவில்லை.
இதற்கு காரணம் அந்த பயங்கரவாத தலைவர்களை பிடிக்க இந்தியா மியான்மரிடம் சில ரகசிய ஆவணங்களை பரிமாறிக் கொண்டது என்றும், ஆனால் அரக்கன் ஆர்மியின் உதவியுடன் இது தொடர்பான ரகசியங்களை ஏற்கனவே தெரிந்து கொண்ட சீனா அந்த தலைவர்கள் இந்தியாவிடம் பிடிபடாதவாறு மறைமுக பாதுகாப்பு வழங்கியதாக மணிப்பூர் காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இதற்கு காரணம் மியான்மரின் பிரிவினைவாத இயக்கமான அரக்கன் இராணுவத்திற்கும், அவர்களின் முகாம்கள் மற்றும் மறைவிடங்களைக் கொண்ட இந்திய கிளர்ச்சிக் குழுக்களுக்கும், ஆயுதங்களை வழங்கி சீனா உதவுகிறது. சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள யுன்னன் மாகாணத்தை தளமாகக் கொண்ட சீனாவின் ஆயுத தளவாட உற்பத்தி நிறுவனமான நோரின்கோ இந்த ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு வழங்குவதாக தி ஃபெடரல் ஆங்கிலப் பத்திரிகை ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தது.
ஏற்கனவே வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா கடந்த 2009 ஆம் ஆண்டு தங்கள் நாட்டில் மறைந்திருந்த உல்ஃபா, என்.டி.எஃப்.பி மற்றும் கே.எல்.ஓ ஆகிய இயக்கங்களின் உயர் மட்ட தலைவர்களை இந்தியாவிடம் ஒப்படைத்தார். அப்போது உல்ஃபா தலைவர் பரேஷ் பருவா மட்டும் சிக்காமல் சீனா உதவியுடன் மியான்மருக்கு அருகே அமைந்துள்ள சீன நகரமான ருயிலிக்கு சென்று விட்டான்.
இந்த நகரம்தான் இந்திய நாட்டை சேர்ந்த வடகிழக்கு பயங்கரவாதிகள் மற்றும் மியான்மர் நாட்டின் பயங்கரவாதிகள் புழங்கும் சட்டவிரோத மையமாக உள்ளதாகவும், உல்பா தலைவன் பாருவா இங்குதான் தன தலைமை அலுவலகத்தை அமைத்து செயல்பட்டு வருவதாகவும் அஸ்ஸாம் மாநில போலீஸ் டைரக்டர் ஜெனரல் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரதமர் மோடி சென்ற 2017 ஆம் ஆண்டு மியான்மர் நாட்டுக்கும் சென்று வந்ததில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே உறவு பலப்பட்டுள்ளது இது சீனாவின் கண்களை உறுத்துவதாகவும் அதனால் மியான்மர் நாட்டுக்கு எதிராக பல விஷம செயல்களை சீனா அரக்கன் இராணுவத்தை தூண்டி இப்போது செய்துவருவதாகம் கூறப்படுகிறது.
ஆனால் மியான்மர் நாட்டுக்கு பல வழிகளிலும் இந்தியா உதவுவதற்கான ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதை அடுத்து இப்போது மியான்மர் அரக்கன் ராணுவம் மீது இந்திய படைகளுடன் சேர்ந்து கடுமையாக நடவடிக்கை எடுத்துவருகிறது. அதே போல பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அரசு முன்பு எடுத்தது மூலம் வடகிழக்கு தீவிரவாதிகள், கிழக்கு மாநிலங்களில் ஊடுருவும் நக்சலைட்டுகளுக்கு சீனாவின் உதவி பெருமளவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயுத கடத்தல் குறைந்துள்ளதால் வட கிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் சீனாவின் விஷமத்தனங்கள் எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
==================================================================================