சென்னையை அவமதிக்கும் ஸ்டாலின், அரவணைக்கும் அமைச்சர் வேலுமணி!
சென்னையை அவமதிக்கும் ஸ்டாலின், அரவணைக்கும் அமைச்சர் வேலுமணி!

கொரோனா காலத்தில் வல்லரசு நாடுகளும், நல்லரசு நிர்வாகங்களும் கொடூர வைரசிலிருந்து தங்களது மக்களை காக்க கேடயங்களாக செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் வழிகாட்டுதலை ஏற்று தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசும், கொரோனா வைரஸ் பரவியது முதல், தற்போது வரை முழு வீச்சில் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும், எதிர்கட்சிகள் குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம், உயிரை பணயம் வைத்து கொரோனாவை ஒழிக்க களப்பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், சுகாதார மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்டவர்களை தொடர்ந்து மட்டம் தட்டி வருகிறது. அவர்களின் மன உறுதியை குலைக்கும் வகையிலும், அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் நாள்தோறும் எதிர்கட்சிகள் வசை பாடுகின்றன. இவர்கள் கிளப்பும் பீதியால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கிளம்பும் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஏதோ சென்னை தான் இந்த நோய் தொற்றின் பிறப்பிடம் என்று இவர்கள் கட்டுக்கதை பரப்பி, தலைநகரில் வசிக்கும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
இத்தருணத்தில் அனைத்து மாவட்ட மக்களையும் அன்னையாக அரவணைக்கும் சென்னை, பேரிடரிலும் பெருந்துயரத்திலும் மீண்டெழுந்ததே வரலாறு என்ற எழுச்சிமிகு பெருமையை எல்லோருக்கும் உணர்த்த "நான் சென்னை, வீழ்வேனென்று நினைத்தாயோ" என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குரல் கொடுத்துள்ளார். தமது ட்விட்டர்,முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களிலும் www.namakaaga.com என்ற இணையதளம் வாயிலாகவும் வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற பெயரில் இப் பேரிடரிலிருந்து சென்னை மீண்டெழும் என்பதை உணர்த்த, சென்னையின் பெருமைகளை தினமும் தெரிவித்து வருகிறார். அதில், மானுட குலமே நித்தம் எதிர்த்து போரிடும் மருந்தில்லா மனித சக்தியை விஞ்சி நிற்கும் ஒரு கொடுந்தொற்று ஏதோ சென்னைக்கு மட்டுமானதாக உருவகித்து, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது தலைமையிலான தமிழக அரசின், அல்லும் பகலும் அயராது உழைக்கும் ஒட்டு மொத்த அரசு இயந்திரத்திற்கும், சென்னைவாழ் மக்கள் பலரின் மனஉறுதிக்கும் ஊறு விளைவித்து வீழ்த்திவிடலாம் அதில் அரசியல் செய்யலாம் என்கிற கனவோடு, சென்னையை நோய்த்தொற்று நகரமாக சித்தரித்து கடுஞ்சொற்களால் அவமதித்து தூற்றி ஏளனம் செய்வோர், ஈவு இரக்கமில்லா கல்நெஞ்சக்கார அரசியல் அரக்கர்கள் என்று அவர் கடுமையாக சாடியிருக்கிறார்.
காலம் காலமாக சென்னையை அன்னையாக கொண்டோர் பலர் அறிவர். வீழ்தல் வரலாறு சென்னைக்கானதன்று என்று! ஒரே ஓரு நாளில் முடியும் போரல்ல கொரோனாவிற்கு எதிரான இந்தப்போர் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனாலும், அரசுக்கும் மக்களுக்கும் இடர் விளைவிக்கும் மாபாதக அருவருப்பு அரசியல் செய்யும் சிலருக்கு, இது தெரியாதா என்ன!? என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
மனித குலமும் மருத்துவ குலமும் மன உறுதியிழக்காது உயிர்கொல்லி நோய் தொற்றுக்கெதிராக புரியும் போர், நீண்ட நெடிய மாபெரும் உலகப்போர் என்றும் இவர்களுக்கு தெரியாதா என்ன!? தெரிந்தும் நித்தம் குறைகூறி அவர்களது இருப்பை காட்டும் வெறுப்பரசியல் கணைகளை மாநகர் சென்னை மீது எத்தனை வீசினாலும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது அரசின் அனைத்து முயற்சிகளாலும் அல்லும் பகலும் உழைக்கும் அத்துணை சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி களவீரர்கள் உதவியுடனும் மக்கள் ஒத்துழைப்பை பெற்று மாவீரனாய் மாநகர் சென்னை "நான் சென்னையடா" என்று நெஞ்சை நிமிர்த்தி கொரோனா நோய்க்காலம் கடந்து மீண்டு வருவான் என்று சென்னை மக்களின் மன உறுதியை கம்பீரமாக பறைசாற்றி, அவர்களின் கரங்களை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வலுப்படுத்தியிருக்கிறார்.
அது மட்டுமில்லை சென்னை நகரம் உருவானது முதல் இந்நாள் வரை சந்தித்த சரித்திர சாதனைகள், பேரழிவுகள், பெருந்துயரங்களை அஞ்சாது எதிர்கொண்ட சென்னை மக்களின் நெஞ்சுரத்தையும் அசத்தலாக பதிவிட்டு வருகிறார். எதனையும் வென்ற சென்னை , இதனையும் வெல்லும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவிக்கும், ஒவ்வொரு பதிவுகளும், சென்னை வாசிகளுக்கு புதுத்தெம்பை அளித்திருக்கிறது.
சென்னையே தன் மீட்டுருவாக்க வரலாற்றில் எதிர்கொண்ட பசி, பட்டினி, பல நோய்தொற்றுகள், போர் குண்டுகள், படையெடுப்பு, புயல், சுனாமி, பெருவெள்ளம் என்று போன்ற சவால்களை எப்படியெல்லாம் வென்று மீண்டேனே அப்படியே கொரோனா என்கிற கொடிய நோய் தொற்றையும் ஒரு நாள் வெல்வேன் என்று பேசுவதாக அமைச்சர் SP வேலுமணியின் இந்த முழக்கங்கள் உள்ளன. இதுவரை யாரும் செய்யாத அளவிற்க்கு வித்தியாசமான அணுகுமுறையில் மக்களுக்கு மன உறுதியை அளிப்பதாக இருக்கின்றன என்று சென்னைவாசிகள் பெருமிதம் கொள்கின்றனர்.