டெல்லி காவல் நிலையத்தை கற்கள் வீசித் தாக்கிய வன்முறைக் கும்பல்! துப்பாக்கிச் சூடும் நடந்ததா..?
டெல்லி காவல் நிலையத்தை கற்கள் வீசித் தாக்கிய வன்முறைக் கும்பல்! துப்பாக்கிச் சூடும் நடந்ததா..?

வட டெல்லியின் இந்திரலோக் பகுதியிலுள்ள காவல் நிலையத்தை ஒரு வன்முறைக் கும்பல் கல்லெறிந்து தாக்கிய அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியின்படி வன்முறைக் கும்பல் ஒரு காவலரை நோக்கி சுட்டதாகவும் எனினும் அவர் காயமின்றி தப்பித்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு காவல்துறை அதிகாரியும் மேலும் சிலரும் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
இந்திரலோக் பகுதியிலுள்ள ஒரு பேக்கரியை சூறையாடியதற்காக கைது செய்யப்பட்ட சகாக்களை சந்திக்க வந்த கும்பல் காவல் நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்த போது இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது.
இந்திரலோக் பகுதியில் பேக்கரி நடத்தி வரும் அக்லக் என்பவரை கடை உரிமையாளரின் மகன் சத்கீனும் அவனுடைய மற்ற சகோதரர்களும் சேர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். அக்லக்கின் கூற்றுப்படி சத்கீனும் அவனது ஆட்களும் உணவு உட்கொண்டு விட்டு அதற்கு பணம் தராமல் செல்ல முயற்சித்துள்ளனர். அக்லக் உணவளிக்க மறுத்தபோது அந்த கும்பல் கடையை சூறையாடி அக்லக்கை அடித்து உதைத்துள்ளனர். இதன்பின்னர் அக்லக் காவல் நிலையத்தில் இதைப் பற்றிப் புகார் அளித்துள்ளார்.
இதைப்பற்றி துணை கமிஷனர் மோனிகா பரத்வாஜ் கூறுகையில் "இரவு 10 மணி அளவில் அக்லக் எங்களிடம் புகார் அளித்தார். புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாக விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்கள் காவலர்களுடன் சண்டையிட்டனர். ஆனால் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு சிலர் காவல் நிலையத்தினுள் நுழைந்து கற்களை வீசியும் காவலர்களை கம்புகளால் அடித்தும் தாக்கத் தொடங்கினர். அவர்களில் ஒருவர் ஒரு காவலரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்" என்றார்.
சிசிடிவி காட்சிகளில் ஒரு கும்பல் கற்கள், கம்புகளுடன் காவல் நிலையத்தினுள் நுழைவதும் அதில் ஒருவர் துப்பாக்கியால் சுடுவதும் பதிவாகியுள்ளது. துணை கமிஷனர் பரத்வாஜ் மேலும் கூறும்போது துணை ஆய்வாளர் பங்கஜ் தற்காப்புக்காக இருமுறை வானத்தை நோக்கி சுட்டதாகத் தெரிவித்தார்.
வன்முறைக் கும்பலில் சத்கீன், அஷ்கீன் மற்றும் ஷாருக் ஆகிய மூவரையும் காவல்துறை கைது செய்துள்ள நிலையில் மற்றவர்களைத் தேடி வருகிறது.