ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணியாற்றுவோருக்கான ஊதியம், அந்தந்த கிராமத்திலேயே வழங்க உத்தரவு.!
ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணியாற்றுவோருக்கான ஊதியம், அந்தந்த கிராமத்திலேயே வழங்க உத்தரவு.!

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, நகர்ப்புறங்களில் உள்ள தினக்கூலிப் பணியாளர்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களில் பணியாற்றுவோரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும், அரிசி, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றுடன் ரூ.1,000 நிவாரண உதவியையும், அரசு வழங்கி வருகிறது. அத்துடன், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை மீண்டும் தொடங்கியிருப்பது,
கிராமப்புற மக்களுக்கு உறுதியான வருமானத்திற்கு வகை செய்துள்ளது மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பாசனக் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாட்டில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள், 31 மாவட்டங்களுக்குட்பட்ட 385 வட்டங்களில் அடங்கிய 12,524 கிராமப் பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு ஆவணங்களின்படி, தமிழ்நாட்டில் 85 லட்சம் வேலை அட்டைகள் வழங்கப்பட்டு, 1 கோடியே 23 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
ஊதியத்தைப் பெறுவதற்காக, வங்கிகளுக்குச் செல்ல அரசுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியளார்களுக்கான ஊதியத்தை, ஒவ்வொரு வியாழக்கிழமையும், அந்தந்த கிராமங்களில் உள்ள பொது இடத்தில், வங்கிப் பிரதிநிதி முன்னிலையில் பட்டுவாடா செய்ய, தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சமூக இடைவெளியைப் பின்பற்றி, ஊதியத்தைப் பெற்றுச் செல்லுமாறு, மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை, ஜுன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு உத்தரவுகளின் படி, கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீண்டும் பணிகள் தொடங்கியிருப்பதால், இத்திட்டத்தின் கீழ் பணியாற்றுவோர் மகிழ்சசி அடைந்துள்ளனர். தங்களது வாழ்வாதாரத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்க ஏதுவாக, வேலை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு, தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணிகளால், ஆண்டுக்கு, குறைந்தது 100 நாட்களுக்கு வேலையும், அதற்கான ஊதியமும் உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம், கிராமப்புறப் பொருளாதார நிலை மாறியுள்ளது.
எனவே, இத்திட்டம், மிகுந்த வரவேற்பைப் பெற்ற அரசுத் திட்டமாக கருதப்படுவதுடன், கிராமப்புற வளர்ச்சியில் அந்த கிராம மக்கள் பங்கேற்கவும் வகை செய்கிறது.