Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவின் தாக்கம்: நீதிமன்றங்களில் வழக்கு மனுக்களுக்கு பெட்டி முறை!

கொரோனாவின் தாக்கம்: நீதிமன்றங்களில் வழக்கு மனுக்களுக்கு பெட்டி முறை!

கொரோனாவின் தாக்கம்: நீதிமன்றங்களில் வழக்கு மனுக்களுக்கு பெட்டி முறை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jun 2020 7:32 AM GMT

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டில் மார்ச் 25-ஆம் தேதி முதல் மத்திய மாநில அரசுகளால் பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. COVID - 19 தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நீதிமன்றங்களும் இயங்குவதை நிறுத்திவிட்டன. பின்னர், நீதிமன்றங்கள் இயங்குவதை அனுமதிக்கத் தளர்வுகள் செய்யப்பட்டன.

உயர்நீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் மட்டும் காணொளிக் காட்சி வாயிலாக எடுத்துக் கொள்ளப்பட்டன. உயர்நீதிமன்றத்தில் 33 சதவீதப் பணியாளர்களை மட்டும் பயன்படுத்துமாறும், பணியாளர்கள் ஷிப்டு முறையில் பணியாற்றுமாறும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மணமுறிவு, போக்சோ, வாகன விபத்து கேட்புரிமை, குடும்ப வன்முறை வழக்குகள், ஜாமீன் மனுக்கள், முன்ஜாமீன் மனுக்கள் ஆகியவற்றை காணொளி மூலம் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மாவட்ட நீதிமன்றங்கள் கூட்டத்தைக் குறைக்கும் வகையில், குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்கத் துவங்கியுள்ளன. திருச்சியில், மக்களைப் பாதுகாக்கும் வகையில், நீதிமன்றங்களில் பாதுகாப்பான விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில், வழக்குகளை பெட்டி முறை மூலம் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, வழக்கு மனுக்களைப் பெற்றுக் கொள்ள திருச்சி நான்காவது கூடுதல் சார்பு நீதிபதி நீதிமன்ற அலுவலகக் கட்டிடத்திற்குள் ஏழு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் அனைத்து வேலை நாட்களிலும், வழக்கு மனுக்களை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பெட்டிகளில் போடலாம். இதற்கான பிரத்யேகப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் பெட்டிகளிலிருந்து மனுக்களை சேகரித்து, சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் அவற்றைத் தாக்கல் செய்வார்கள்.

வழக்கறிஞர்களும் தங்கள் மனுக்களை இந்தப் பெட்டிகளில் போடலாம். இருப்பினும், பொதுமக்கள் நேரடியாக வழக்கு மனுக்களை இந்தப் பெட்டிகளில் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் வழக்கறிஞர்கள் மூலமாகவே மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.


முதல் பெட்டியில் உள்ள மனுக்கள் திருச்சி முதன்மை மாவட்ட நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள் 1, 2, 3 ஆகியவை தொடர்பானவையாகும். இரண்டாவது பெட்டியில் உள்ள மனுக்கள், திருச்சி குடும்ப நீதிமன்றம், தொழிலாளர் நீதிமன்றம், மகளிர் நீதிமன்றங்கள் தொடர்பானவையாகும். மூன்றாவது பெட்டி, திருச்சி முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றங்கள் 1,2,4 ஆகியவை தொடர்பானது.

நான்காவது பெட்டியில், திருச்சி சிறப்பு மாவட்ட நீதிமன்றம், சிறப்பு சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம் 3 ஆகியவை தொடர்பான வழக்கு மனுக்கள் போடப்படும். ஐந்தாவது பெட்டியில், திருச்சி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு நீதிமன்றம், அனைத்து ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் தொடர்பான வழக்குகள் தாக்கல் செய்யப்படும்.


ஆறாவது பெட்டி, திருச்சி முதன்மை மாவட்ட முன்சிப் நீதிமன்றம், கூடுதல் முன்சிப் நீதிமன்றம் 1, கூடுதல் மாவட்ட முன்சிப் நீதிமன்றம் 2, கூடுதல் முன்சிப் நீதிமன்றம் 3 ஆகியவை தொடர்பான மனுக்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஏழாவது பெட்டி, திருச்சி முதன்மை மாவட்ட நீதிமன்றம் தொடர்பானவற்றுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பான இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றும் வகையில், புதுக்கோட்டை போன்ற பல மாவட்ட நீதிமன்றங்களிலும், வழக்கறிஞர்களிடமிருந்து வழக்கு மனுக்களைப் பெற்றுக்கொள்ள பெட்டி முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 யாரையும் விட்டு வைக்காது. தினசரி விவகாரங்களுக்கு மாற்றுவழிகளைக் கற்க வேண்டியது அவசியம்.

ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், நீதிபரிபாலன முறை காத்திருக்க முடியாது. அதனால், பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றி, நீதித்துறை சேவையை அளித்து வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News