ஜார்க்கண்ட் மாநிலத்தில் தங்கச் சுரங்கமா? புவியியல் ஆய்வு நிறுவன ஆய்வில் கண்டுபிடிப்பு.!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தங்கச் சுரங்கமா? புவியியல் ஆய்வு நிறுவன ஆய்வில் கண்டுபிடிப்பு.!

கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் (GSI) ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது. எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் நகரிலிருந்து 20கிமீ தொலைவில் உள்ள கிழக்கு சிங்பம் மாவட்டத்தின் பிடர் தரி கிராமத்தில் பூமிக்கடியில் 250 கிலோ தங்கம் இருக்கும் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
புவியியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த ஜூன் மூன்றாம் தேதியே ஜார்க்கண்ட் மாநில அரசிடம் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்ட தகவலை தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் விரைவில் சுரங்கப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தங்கம் வெட்டி எடுக்க உரிமம் வழங்க ஏலம் விடும் பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. ஆய்வின்போது ஆறு குழிகள் தோண்டப்பட்டு அதிகபட்சமாக கிட்டத்தட்ட 600 மீட்டர் ஆழம் வரை தங்கம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கப்பட்டதாக தெரிகிறது. ஆய்வு முடிவின்படி தங்கச் சுரங்கம் வெட்ட 150 மீட்டர் ஆழம் வரை தோண்ட வேண்டி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
பூமிக்கடியில் இருந்து எடுக்கப்பட்ட 709 மாதிரிகளில் 3,40,354.7 டன் தங்கத் தாதுவில் இருந்து 0.71 கிராம்/டன்(0.4 கிராம்/டன் குறைந்தபட்ச நிர்ணயம்) என்ற அளவிலும் 55,196 டன் தாதுவிலிருந்து 1 கிராம்/ டன் (1கிராம்/டன் குறைந்தபட்ச நிர்ணயம்) என்ற அளவிலும் தங்கம் கிடைத்ததாக புவியியல் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. தங்கச் சுரங்கம் அமைக்க முடியுமா என்று ஆராய 2013-14லேயே நில அளவை, வரைபடம் தயாரித்தல், மாதிரி எடுத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி விட்ட நிலையில் 2017-18ல் ஆழ்துளை அமைக்கும் பணிகள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.