ரதயாத்திரைக்கு சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி: புறப்படத் தயார் ஆனார் பூரி ஜெகந்நாதர்!
ரதயாத்திரைக்கு சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி: புறப்படத் தயார் ஆனார் பூரி ஜெகந்நாதர்!
By : Kathir Webdesk
ஒடிசா மாநிலம் பூரியில் பல நூற்றாண்டுகளாக ஆண்டுதோறும் நடைபெறும் ஜகந்நாதர் கோயில் ரதயாத்திரைக்கு கடும் நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் சமரசத்தை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த தலைமை நீதிபதி, பொது மக்கள் பங்கேற்காத வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் பூரி ஜகந்நாதர் கோயில் ரத யாத்திரை நடத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தின் கடற்கரை நகரான பூரியில் புகழ்பெற்ற ஜகந்நாதர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் பாலபத்ரா, அவர் சகோதரர் ஜகந்நாதன் மற்றும் சகோதரி சுபத்ரா தேவி ஆகியோர் மூலவர்களாக உள்ளனர். மூன்று மூலவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கலைக்கப்பட்ட ரதங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு தேரோட்டம் நடப்பது பல நூற்றாண்டு வழக்கம்.
இந்த ரத யாத்திரை கோவிலில் இருந்து கிளம்பி 2 KM தூரத்தில் உள்ள மவுசிமா என்ற பெயருடைய இவர்களின் அத்தையார் தங்கியுள்ள கோவில் வரை செல்லும். அங்கு 9 நாள் தங்கி இருந்து மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு ரதம் வந்து சேரும். அதன் பிறகு இந்த ரதங்கள் கலைக்கப்படும்.
சுமார் 14 அடி நீளம் உள்ள ஒவ்வொரு பிரம்மாண்ட தேரும் தெருக்களில் செல்லும் போது மக்கள் மேள தாளங்கள், இசைக் கருவிகளுடன் இலட்சக்கணக்கில் ஊர்வலத்தில் கலந்துக் கொள்வார்கள். இந்த 10 நாள் உற்சவத்தை காண உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கில் இங்கு வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை வரும் 23 ஆம் தேதி தொடங்க இருந்தது. ஒரிசா விகாஸ் பரிஷத் என்னும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பூரி ஜகந்நாதர் தேரோட்டம் நடக்கும் போது பாதிப்பு மேலும் அதிகரிக்கும் எனவும், லட்சக்கணக்கானோர் கலந்துக் கொள்ளும் விழாவில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாது எனவும் தெரிவித்தது.
இந்த விழாவுக்குத் இந்த ஆண்டு தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய மற்றும் மாநில அரசுகள், கோரோனாவைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளைப் பின்பற்றி ரத யாத்திரையை நடத்த ஒப்புக் கொண்டால், கடந்த 18 ஆம் தேதி ரத யாத்திரையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியது.
மேலும், மிகவும் கட்டுப்பாட்டுடன், பக்தர்கள் அதிகம் பங்கேற்காத வகையில் ரத யாத்திரையை நடத்தவும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. இதற்கு மத்திய அரசுடன் இணைந்து செயல்படவும் ஒடிசா அரசு ஒப்புக் கொண்டது. இதையடுத்து, ஜெகந்நாதர் ரத யாத்திரையை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
அதே சமயம் ரத யாத்திரையில் ஏராளமானோர் பங்கேற்றால் கொரோனா தொற்றுப் பரவும் அபாயம் அதிகமாகும் என்றும், ரத யாத்திரை முடிந்த பிறகு யாருக்கேனும் தொற்று ஏற்பட்டிருந்தால் அனைவரையும் அடையாளம் காண்பதும் முடியாத காரியம் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்து ஜூன் 18 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டதாக அறிவித்தது.
முன்னதாக பூரி ஜகந்நாதர் கோயிலின் பரம்பரை தலைமை அறங்காவலரான ஜனார்தன் பட்டாஜோஷி மொஹாபத்ரா உட்பட 12 விண்ணப்பதாரர்கள், ஜூன் 18 உத்தரவை மாற்றியமைத்து ரதயாத்திரைக்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.
பக்தர்களின் கோரிக்கைக்கேற்ப மாநில பாரதீய ஜனதா தலைவர் சம்பித் பத்ராவும் இதேபோன்ற மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்தார். பொது மக்கள் பங்கேற்காத வகையில் ரத யாத்திரை நடத்த முடியும் என்றும் அதனால் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் பூரி ஜெகந்நாத் கோயிலில் பகவான் ஜெகந்நாத் மற்றும் பிற தெய்வங்களின் சடங்கு சேவைகளைச் செய்யும் 800 சேவையாளர்களை மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் ரத யாத்திரையை நடத்த முடியும் என்று கோரி பத்ரா மனுவை சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
source : hindhustan