Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்பு கட்டுரை: இந்தியாவா? சீனாவா? போர் வந்தால் யாருக்கு பலம் அதிகம்?

சிறப்பு கட்டுரை: இந்தியாவா? சீனாவா? போர் வந்தால் யாருக்கு பலம் அதிகம்?

சிறப்பு கட்டுரை: இந்தியாவா? சீனாவா? போர் வந்தால் யாருக்கு பலம் அதிகம்?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Jun 2020 5:36 AM GMT

கடந்த திங்களன்று சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்களிடையே நடந்த இரத்தக் களரியில் 20 வீரர்களை இந்திய ராணுவம் இழந்த அதே இமாலயப் பகுதிக்காகத் தான் 1962 ஆம் ஆண்டும் இரு நாடுகளும் போர் புரிந்தன. ஒரு அறுபது வருடங்களுக்கு முன்பு ஒரு மாதம் நீடித்த இந்த மோதலுக்குப் பின்னர் சீனா வெற்றியடைந்ததாக அறிவித்து இரு‌ நாடுகளும் சொந்தம் கொண்டாடும் அக்சாய் சின் பகுதியை வசப்படுத்தி விட்டதாகக் கூறி போர் நிறுத்தத்தை அறிவித்தது. இந்தப் போரில் கிட்டத்தட்ட 700 சீன வீரர்களும் அதன் இருமடங்கு எண்ணிக்கையிலான இந்திய வீரர்களும் உயிர் நீத்தனர். 58 ஆண்டுகளுக்கு முன்பு அன்று போரிட்ட ராணுவங்களுக்கும் அவை இப்போது இருக்கும் நிலைக்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன.

வழக்கமான நடைமுறைகள், நம்பிக்கைகளின் படி இந்தியாவை விட சீனாவின் ராணுவ பலம் அதிகம் என்று எண்ணப்பட்டாலும் ஹார்வர்ட் கென்னடி ஸ்கூல் ஆஃப் கவர்ன்மென்டின் Belfer குழு, பாஸ்டன் மற்றும் புதிய அமெரிக்க பாதுகாப்பு மையம் (Center for a New American Security), வாஷிங்டன் ஆகியவை நடத்திய ஆய்வில், தற்போது மோதல் நடந்த பகுதியைப் போன்ற கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இருக்கும் மலைப்பாங்கான பகுதிகளில் இந்தியாவிற்கு சாதகமான நிலை இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

அணு ஆயுதங்கள்

முந்தைய போருக்குப் பின் இரு நாடுகளுமே அணு ஆயுத சக்திகளாக உருவெடுத்து விட்டன. தற்போதைய மோதல் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் இரு நாடுகளின் படை பலத்தையும் போர்த் திறனையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த விஷயத்தை விட்டு விட முடியாது. சீனா 1964 இலும் இந்தியா 1974இலும் வெற்றிகரமாக அணுசக்தி சோதனையை நடத்தின.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIRPI) வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி இந்தியா 150 அணு ஆயுதங்களையும், சீனா அதை விட இருமடங்குக்கும் சற்று அதிகமான 320 அணு ஆயுதங்களையும் வைத்துள்ளதாகத் தெரியவருகிறது. கடந்த வருடத்தில் சீனாவின் அணு ஆயுத எண்ணிக்கை 40 என்ற அளவிலும் இந்தியாவின் எண்ணிக்கை 10 என்ற அளவிலும் அதிகரித்து இருப்பதாகவும் தெரிய வருகிறது. இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்களை ஏவத் தேவையான ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவை உள்ளன. இருவரும் "no first use policy" எனப்படும் தங்களது நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் மட்டுமே தாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்ற கொள்கையைக் கடைபிடிக்கிறார்கள்.

விமானப்படை

சீனாவுடன் போர் என்று வந்தால் களமிறக்க இந்தியாவிடம் 270 ஃபைட்டர் ஜெட்களும் 68 தரைத் தாக்குதலில் ஈடுபடக்கூடிய போர்‌ விமானங்களும் உள்ளன என்று மார்ச்சில் தயாரிக்கப்பட்ட Belfer Center ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. மேலும், சீனாவுடன் பகிரப்படும் எல்லைப் பகுதியில் வரிசையாக அமைத்திருக்கும் சிறிய விமான தளங்கள் மூலம் இந்த விமானங்களை நிலை நிறுத்தவும் போருக்கு உடனடியாக அனுப்பி வைக்கவும்‌ இந்தியாவால் முடியும் என்றும் இந்தக் கட்டுரை கூறுகிறது.

சீனாவோ 157 ஃபைட்டர் ஜெட்கள் மட்டுமே வைத்திருக்கிறது. அது போக இந்திய- சீன எல்லைப் பகுதியில் தரைத் தாக்குதலில் ஈடுபடுத்தப்படக்கூடிய ஒரு சிறிய ட்ரோன் படையையும் வைத்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த பகுதியில் சீன விமானப்படை 8 தளங்களைப் பயன்படுத்துகிறது. இவற்றில் பெரும்பாலானவை சிவில் விமான போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுபவை. மேலும் சிக்கலான உயரங்களில் இருப்பவை என்று அந்த ஆய்வு கூறுகிறது.

ஜின்ஜியாங் மற்றும் திபெத்தில் இருக்கும் அதி உயர சீன விமான தளங்கள்‌ மற்றும் கடினமான புவியியல் மற்றும் வானிலை சார்ந்த பிரச்சினைகளால் சீன போர் விமானங்கள் அவற்றின் முழு திறனில் பாதி எடையையும் எரிபொருளையும் மட்டுமே சுமந்து செல்லுமாறு அவற்றின் திறன் மட்டுப்படும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. வானிலேயே எரிபொருள் நிரப்புவது இந்த பிரச்சினையைத் தீர்க்கும். ஆனால் சீன விமானப்படையிடம் போதிய அளவு ஏரியல் டேங்கர்கள் இல்லை என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை Mirage 2000 மற்றும் Sukhoi Su-30 ஜெட்களையும் சீன விமானப்படை J-10, J-11 மற்றும் Su-27 ஜெட்கள் ஆகியவற்றையும் பயன்படுத்தும் நிலையில் இங்கும் நிலைமை இந்தியாவுக்குத் தான் அனுகூலமாக உள்ளது என்று இந்த Belfer ஆய்வு தெரிவிக்கிறது. இந்திய விமானங்களான Mirage 2000 மற்றும் Sukhoi Su-30 எல்லா வகையான வானிலையிலும் இலகுவாக செயல்படக் கூடியவை. மேலும் பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படக் கூடியவை. ஆனால் சீனாவின் ஜெட் களில் J-10க்கு மட்டுமே இந்த திறன் இருக்கிறது. மற்றொரு ஆய்வு நிறுவனமான CNAS அறிக்கையின்படி அக்டோபர் 2019 தரவுகளின் படி சீனாவை மனதில் வைத்து இந்தியா எல்லையை ஒட்டிள்ள விமான தளங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது என்று தெரிய வருகிறது. "சீன ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் இந்தியா உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. பின்னடைவுகளில் இருந்து மீளுதல், உத்தரவு, கட்டுப்பாடு மற்றும் தகவல்தொடர்பு மேம்பாடு மற்றும் வான்வெளிப் பாதுகாப்பில் மேம்பாடு ஆகியவற்றை அடையத் தேவையான முயற்சிகளை எடுத்துள்ளது" என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளில் அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி அவற்றை பலப்படுத்திய சீனா இமாலயத்தில் உள்ள இராணுவ தளங்களை கவனிக்காமல் விட்டு விட்டது. இதனால் 4 சீன ராணுவ விமான தளங்கள் எளிதாகத் தாக்கக் கூடிய நிலையில் உள்ளன. "இந்த 4 விமான தளங்களையும் இந்தியா அழித்தாலோ அல்லது தற்காலிகமாக பயன்படுத்த முடியாமல் செய்தாலோ அது ஏற்கனவே இருக்கும் சீன விமானப்படையின் பலவீனங்களையும் செயல்பாடுகளில் நெகிழ்வற்ற தன்மையையும் இன்னும் மோசமாக்கும்" என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. இந்தியாவிற்கு மற்றொரு அனுகூலமாக இந்த ஆய்வு குறிப்பிடும் விஷயம் - அனுபவம். "பாகிஸ்தானுடன் அண்மையில் ஏற்பட்ட மோதல் காரணமாக தற்போது இருக்கும் இந்திய விமானப்படை வீரர்களுக்கு உண்மையான போரில் பங்கேற்ற அனுபவம் கிடைத்தது" என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த அனுபவம் இல்லாததால் சீன விமானிகள் மாறும் சூழ்நிலைகளைக் கொண்ட போர்க்களத்தில் சுய சிந்தனையால் முடிவுகள் எடுக்கத் திணறும் நிலை உருவாகலாம் என்றும் முன்னறிவிப்பின்றி ஏற்படுத்தப்பட்ட சூழல்களில் சீன விமானிகள் தரையிலிருந்து வரும் கட்டுப்பாட்டு குறிப்புகளையும் வழிகாட்டுதலையுமே பெரிதும் நம்பி இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மதிப்பிடப்படுவதை விட சீன விமானப் படையின் போர்த்திறன் குறிப்பிடத்தக்க அளவில் பலவீனமாக இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.

தரைப்படைகள்

வான்வெளியில் அனுபவம் இருப்பதைப் போல் இந்தியாவின் தரைப்படையும் அடிக்கடி பாகிஸ்தானுடன் காஷ்மீர் மாநிலத்திலும் அதன் எல்லைப் பகுதிகளிலும் நடக்கும் மோதல்களினால் வலிமை பெற்றிருப்பதாக CNAS அறிக்கை கூறுகிறது. இந்தியாதான் தொடர்ச்சியான சிறிய அளவிலான பிரச்சனைகளை சந்தித்து சண்டையிடுவதால் அனுபவமிக்க போர் வலிமை பெற்ற தரைப் படையை கொண்டுள்ளது. சீன ராணுவம் 1979இல் வியட்நாம் உடன் நடந்த போருக்கு பிறகு வேறு எந்த வகையான சண்டையிலும் ஈடுபட வில்லை என்பதால் அனுபவம் இன்றி உள்ளது.

கம்போடியாவில் வியட்நாம் ராணுவம் தலையிட்டதால் சீனா ஆரம்பித்த ஒரு மாத போர் சீனாவுக்கு ஒரு தோல்வியாக அமைந்தது என்று எண்ணப்படுகிறது. வியட்நாம் போரில் அமெரிக்க படைகளுக்கு எதிராக போரிட்டு அனுபவம் பெற்றிருந்த வியட்நாமிய துருப்புகள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்களை தோற்கடிப்பது சீனாவுக்கு கடினமான விஷயமாக இருந்தது.

அனுபவத்தில் பெரிய இடைவெளி இருந்தாலும் தரைப்படை வீரர்களின் எண்ணிக்கையில் இரு நாடுகளும் ஏறக்குறைய சமமாகவே இருப்பதாக தெரிகிறது. இந்திய வீரர்கள் 2,25,000 பேரும் சீனாவிடம் 2,00,000 முதல் 2,30,000 வீரர்களும் இருப்பார்கள் என்று Belfer நிறுவன ஆய்வு உத்தேசமாக சொல்கிறது. இந்த எண்ணிக்கை தவறாகக் கூட இருக்கலாம். ஜின்ஜியாங் மற்றும் திபெத்தில் கிளர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க அங்கே நிறுத்தப்பட்டுள்ள தரைப்படைகளும் சீனா ரஷ்யா எல்லையில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க நிறுத்தப்பட்டுள்ள படைகளும் இவற்றில் சேர்த்தி.

அங்கிருந்து இந்த படைகளை இந்திய எல்லைக்கு கொண்டு வருவதில் போக்குவரத்து பிரச்சினைகள் ஏற்படலாம். ஏனெனில் அப்படி ஒரு சூழ்நிலையில் இந்திய விமானப்படை திபெத்திய பீடபூமியில் உள்ள அதிவேக ரயில் வழிகளையும் எல்லையை ஒட்டியுள்ள மலைப் பிரதேசத்தின் முக்கியமான புள்ளிகளையும் தாக்கி சேதம் ஏற்படுத்த முடியும். இதற்கு எதிர்மறையாக இந்தியப் படைகள் ஏற்கனவே எல்லையில் தயாராக உள்ளன என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

எனினும் இந்தியப்படைகள் ஆழமான பள்ளத்தாக்குகள் நிறைந்த கடினமான நிலப்பகுதியில் செயல்பட வேண்டியதிருப்பதால் அவர்களின் நிலையில் சீனப் படைகள் ஊடுருவி குலைக்க முற்படும்போது அதை சமாளிப்பது சிரமமாக இருக்கும் என்றும் CNAS ஆய்வறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது. சுருக்கமாகச் சொன்னால் இந்திய துருப்புகளும் மலைப்பகுதியில் குறுகலான இடங்களில் சீன பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகலாம்.

CNAS அறிக்கையின்படி இத்தகைய தாக்குதல்கள் திபெத்திய பீடபூமியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள சீன பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக நடத்தப்படலாம் என்றும் இவை இந்திய எல்லையில் இருக்கும் துருப்புகளின் நிலைகளை நேரடியாக நோக்குவதுபோல் உள்ளன என்றும் குறிப்பிடுகிறது. அப்படியான ஆனாலும் முழு அளவிலான போர் ஏற்பட்டால் இந்தியாவில் இருக்கும் அனைத்து இலக்குகளையும் தாக்கும் அளவு சீனாவிடம் ஏவுகணைகள் இருக்கின்றனவா என்பதுதான் இங்கே கேள்விக்குரியது.

Belfer ஆய்வறிக்கையில் முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் ஒரு இந்திய விமானப்படை தளத்தை அழிக்க ஒரு நாளைக்கு சீனாவுக்கு 220 நீண்ட தொலைவிற்கு பாயும் ஏவுகணைகள் தேவைப்படும் என்று கணித்ததாக குறிப்பிடுகிறது எனவே 1000 முதல் 1200 ஏவுகணைகள் மட்டுமே கொண்டிருக்கும் சீனா இந்திய விமான தளங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கும் முயற்சியில் விரைவிலேயே ஏவுகணைகள் இல்லாமல் தவிக்க நேரிடும் என்று இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

சீனாவிற்கு அனுகூலமாக அமையக் கூடிய ஒரே பகுதி அதன் தொழில்நுட்பம் மற்றும் புதிய ஆயுதங்கள். பெரிய அளவிலான பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் மற்றும் விரைவாக நவீனமயமாகி வரும் ராணுவம் ஆகியவற்றை கணக்கில் கொண்டால் சீன ராணுவம் அதற்கு இருக்கும் பலவீனங்களை நிரப்பாமல் விடும் என்று சொல்ல முடியாது. "சீனப் பொருளாதாரம் இந்திய பொருளாதாரத்தைப் போல் ஐந்து மடங்கு பெரியது: சீனா பாதுகாப்புக்காக செலவழிக்கும் நிதி இந்தியா செலவழிக்கும் நிதியை விட 3 மடங்கு அதிகம்" என்கிறார் ஆப்கானிஸ்தான் தேசிய பேச்சுவார்த்தை மட்டும் முன்னேற்ற மையத்தின் சர்வதேச ஆலோசகர் நிஷாங்க் மோத்வானி.

"சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அதிகார வேறுபாடு அதிகமாக உள்ளது சீனாவுக்கு சாதகமாக அமையும். இந்த சமச்சீரற்ற தன்மை மேலும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா அரசு ஊடகங்கள் தற்போது திபெத் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள புதிய தளவாடங்களைப் பற்றியும் அவற்றைப் பயன்படுத்தி நடக்கும் போர்ப் பயிற்சிகளைப் பற்றியும் அதிக அளவில் கட்டுரைகளும் வீடியோக்களும் வெளியிட்டு வருகின்றன.

'இந்த ஆயுதங்கள் பீடபூமி பகுதியில் செயல்படுவதற்கு ஏற்ற சிறப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.இவை எல்லைப் பகுதிகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்' என்று ராணுவ நிபுணர்கள் கூறியதாக சீன அரச செய்தி ஊடகம் Global Times செய்தி வெளியிட்டது. திங்கள் இரவு இந்தியத் துருப்புகள் உடன் ஏற்பட்ட மோதலுக்கு பின் செவ்வாயன்று புதிய ஆயுதங்களைப் பற்றிய இந்தக் கட்டுரையை Global Times வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

'இத்தகைய போர்ப் பயிற்சிகள் பிராந்திய, மலைப்பகுதிகளில் எழும் மோதல்களில் எதிரிப் படையின் தலைமையிடம் மற்றும் கமாண்டர்களை தொடக்க நிலையிலேயே அழித்து வெற்றி பெறும் திறன் சீன ராணுவத்திற்கு இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டின என்று திபெத்தில் பணிபுரிந்த பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக Global Times செய்தி வெளியிட்டது' என்று அறிக்கை கூறுகிறது.

கூட்டாளிகள்

இமயத்தில் இந்தியாவை சீனா பெரும்பங்கு தனியாகவே எதிர்க்க வேண்டியிருக்கும் நிலையில் இந்தியாவோ சீனாவின் இராணுவ ஆதிக்கம் அதிகரிப்பதை விரும்பாத நாடுகளுடன் பாதுகாப்பு தொடர்பான உறவை மேம்படுத்தி வருகிறது. இரு தரப்பு மற்றும் பல தரப்பு ராணுவ பயிற்சிகளை அதிகரித்ததோடு இந்தியாவை 'முக்கியமான பாதுகாப்பு கூட்டாளி' என்று அமெரிக்க குறிப்பிட்டதுடன் அமெரிக்க ராணுவத்துடன் கடந்த சில வருடங்களாக இந்தியாவின் நெருக்கம் அதிகரித்து வருகிறது.

இமயத்தில் பெரிய அளவில் மோதல் ஏற்படும் நிலை வந்தால்‌ போர்க்களத்தைப் பற்றி தெளிவான தகவல்களை வழங்கி அமெரிக்க உளவுத்துறை உதவ‌ வாய்ப்புள்ளது. உள்நாட்டிலிருந்து சீனா படைகளை இமயப் பகுதிக்கு நகர்த்தும் சூழ்நிலை ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை Belfer‌அறிக்கை உதாரணமாகக் காட்டியுள்ளது. "இத்தகைய இயக்கம் அமெரிக்க உளவுத்துறையின் கவனத்தை ஈர்க்கும். அமெரிக்கா இந்தியாவிற்கு தகவல் தெரிவித்து இந்தியா கூடுதல் படைகளை உள்நாட்டிலிருந்து எல்லைக்கு தருவிக்க இது உதவியாக இருக்கும்" என்று இந்த அறிக்கை கூறுகிறது.

அமெரிக்கா, ஜப்பான், ஃபிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாட்டு ராணுவங்களுடன் இந்திய ராணுவம் அடிக்கடி போர்ப் பயிற்சிகளில் ஈடுபடுகிறது. "போர்ப் பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளில் அடிக்கடி பங்கேற்கும் மேற்கத்திய துருப்புகள் இந்திய வீரர்களின் சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்வது மற்றும் தந்திரமாக சூழ்நிலைகளை‌ எதிர்கொள்ளும் படைப்பாற்றல் ஆகியவற்றை ஒத்துக்கொண்டு பாராட்டுகின்றனர்." என்று CNAS அறிக்கை கூறுகிறது. "சீனாவின் போர்ப் பயிற்சிகளோ இது வரை அடிப்படைக் கூறுகளை ஒட்டி மட்டுமே இருந்துள்ளது. ஒரே ஒரு விலக்கு என்னவென்றால் பாகிஸ்தான் மற்றும் ரஷ்யாவுடனான மேம்பட்ட ராணுவப் பயிற்சி முறை மட்டுமே" என்றும்‌ அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : CNN

Next Story
கதிர் தொகுப்பு
Trending News