'இந்தியாவும் ஈரானும் அப்படி ஒரு ஒப்பந்தமே போடவில்லை. பிறகு எப்படி ரத்து செய்ய முடியும்?' - தி இந்துவின் பொய் பிரச்சாரத்தை உடைத்த ஈரான் அதிகாரிகள்!
'இந்தியாவும் ஈரானும் அப்படி ஒரு ஒப்பந்தமே போடவில்லை. பிறகு எப்படி ரத்து செய்ய முடியும்?' - தி இந்துவின் பொய் பிரச்சாரத்தை உடைத்த ஈரான் அதிகாரிகள்!

ஈரான்-இந்தியா இடையிலான சபாஹார்-ஜஹேடன் ரயில் திட்டத்தை ஈரான் கைவிட்டு விட்டதாகவும் சீனா அளித்த நிதி உதவியில் அந்த திட்டத்தை ஈரானே செயல்படுத்தப் போவதாகவும் வெளியான செய்தி உண்மையல்ல என்று ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஈரான் ரயில்வே துறையுடன் இணைந்து இந்தியா சபாஹார்-ஜகேடன் இடையே ரயில் பாதை அமைக்க ஒப்பந்தம் செய்ததாகவும், இந்தியத் தரப்பில் நிதி அளிக்க தாமதமாவதால் தாங்களே செயல்படுத்தப் போவதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்ததாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது. மேலும், அண்மையில் ஈரானுக்கு சீனா $ 400 பில்லியன் டாலர் நிதி உதவி அளித்ததாகவும் அதைக் கொண்டு தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படப் போகிறது என்பது போன்றும் தி இந்து செய்தி வெளியிட்டு இருந்தது.
ஆனால், அப்படி ஒரு திட்டமே கையெழுத்தாகவில்லை என்றும் சபாஹார் துறைமுக இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பெறுவதிலும் $ 150 மில்லியன் டாலர் இந்திய முதலீடு ஆகியவை பற்றி மட்டுமே ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் போக்குவரத்து அமைப்பின் அதிகாரி ஈரானின் அரசு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானுக்கு உதவுவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கலாம் என்ற அச்சத்தில் தான் இந்தியா முதலீடு செய்ய தயங்குகிறது என்ற யூகத்தையும் ஈரான் அதிகாரிகள் மறுத்துள்ளனர். அமெரிக்க பொருளாதார தடை இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.
நன்றி : ஸ்வராஜ்யா