கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனலை முடக்க சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை!
கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனலை முடக்க சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை!
By : Kathir Webdesk
கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் மீது பல தரப்பினரும் காவல்துறையில் புகாரளித்த நிலையில் அந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில் வாசன் மற்றும் சுரேந்தர் நடராஜன் என்ற இருவர் கைது செய்யப்பட்டு அவர்களது அலுவலகமும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் சீல் வைக்கப்பட்டது. இந்துக் கடவுள்கள் மற்றும் புராணங்களைப் பற்றி அவதூறு பரப்பிய கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் முன்வைக்கப்பட்டது.
சேலத்தைச் சேர்ந்த சக்ரபாணி என்பவர் சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம், "ஹிந்துக்களின் மனதை புண்படுத்தி, கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கும், கருப்பர் கூட்டத்தால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ, ஆடியோ காட்சிகள், படங்களை, உடனே தடுத்து நிறுத்த வேண்டும். கலவரத்தை தூண்டும்படி பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து கருப்பர் கூட்டம் சேனலைச் சேர்ந்த 10 பேர் மீது ஆபாச வார்த்தையால் திட்டுதல், மத கலவரத்தை ஏற்படுத்தும்படி செயல்படுதல், மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் செயலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் பிரிவினர் விசாரித்து வந்தனர். தற்போது சென்னை சைபர் கிரைம் பிரிவு காவல்துறை கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனலை முடக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.