பாசப் போராட்டம் நடத்திய கோவில் காளை - பசு மாட்டுடன் இணைத்து வைத்த துணை முதல்வர் மகன்.!
பாசப் போராட்டம் நடத்திய கோவில் காளை - பசு மாட்டுடன் இணைத்து வைத்த துணை முதல்வர் மகன்.!
இயற்கைக்கு இழைத்த தீங்கால் ஆறறிவு படைத்த மனிதர்கள் இன்று சமூக இடைவெளியைக் கடைபிடிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். ஆனால் கள்ளம் கபடமில்லா ஐந்தறிவு கொண்ட விலங்குகள் இயற்கையின் மகத்துவத்தை அவ்வப்போது நமக்கு உணரத்திக் கொண்டு தான் இருக்கின்றன.
மதுரை மாலமேட்டைச் சேர்ந்த முனியாண்டி ராஜா என்பவர் ஒரு பசு மாட்டை வளர்த்து வந்தார். அந்தப் பகுதியில் உள்ள மஞ்சமலை சுவாமி கோவிலின் காளை இந்த பசு மாட்டுடன் நட்பாகப் பழகி வந்துள்ளது. மாட்டுடன் சேர்ந்து உணவு உண்பது, தண்ணீர் அருந்துவது என்று நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளன. கோவில் காளை என்பதால் முனியாண்டி அதனை ஒன்றும் செய்யாமல் அதன் போக்கில் விட்டுவிட்டார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வருமானம் இன்றி தவிக்கும் பலரைப் போல முனியாண்டியும் கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால் பசு மாட்டைப் பராமரிக்க இயலாமல் அதை விற்றிருக்கிறார். பசு மாட்டை வாங்கியவரிடம் அழைத்துச் செல்ல சரக்கு வாகனத்தில் ஏற்றிய போது கோவில் காளை வழி மறித்து வாகனத்தை நகர விடாமல் தடுத்துள்ளது.
எப்படியோ போக்குக் காட்டி ஓட்டுநர் சரக்கு வாகனத்தை எடுத்த பின் பிரிவைத் தாங்க முடியாத காளை கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் சரக்கு வாகனத்தின் பின்னால் ஓடிச் சென்று மூச்சு வாங்கி நின்றுள்ளது. இந்த காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களிலும் செய்தி சேனல்களிலும் வைரலாகியது.
இது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப்பின் கவனத்துக்கு வர, அவர் தனது நண்பர்கள் உதவியுடன் விற்கப்பட்ட பசுவை தானே விலைக்கு வாங்கி மஞ்சமலை சுவாமி கோயில் நிர்வாகத்திடம் தானமாக வழங்கி இரு நண்பர்களையும் ஒன்றிணைத்துள்ளார். மேலும் அவற்றைப் பராமரிக்க ஜெயபிரதீப் நிதி உதவியும் செய்ததாக கூறப்படுகிறது.
"பசுமாட்டைப் பிரிய மனம் இல்லாமல் காளை மாடு வண்டியின் பின்னால் ஓடிவந்தது அனைவரது மனதையும் உருகச் செய்தது. இச்செய்தி துணைமுதல்வர் கவனத்துக்குச் செல்ல, அவரது உத்தரவின்படி, பசுமாட்டை மீட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளோம்" என்று அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.