Kathir News
Begin typing your search above and press return to search.

'சிவம் பேசினால் சவம் எழும்' - வீர முரசு சுப்பிரமணிய சிவா நினைவு தினம் இன்று!

'சிவம் பேசினால் சவம் எழும்' - வீர முரசு சுப்பிரமணிய சிவா நினைவு தினம் இன்று!

சிவம் பேசினால் சவம் எழும் - வீர முரசு சுப்பிரமணிய சிவா நினைவு தினம் இன்று!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 2:46 AM GMT

பொதுவாகவே காலனிய காலத்து மெக்காலே கல்வி முறை நமது பாரத தேசத்தை அந்நியரின் பிடியினின்று விடுவிக்க பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய இன்றைய தலைமுறை அதிகம் அறிய விடாமல் செய்து‌ விட்டது. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் இந்த அவலம் தொடரத் தான் செய்கிறது.

பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரையும் ஊரையும் அன்றி பெரும்பாலான முக்கிய தகவல்கள் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுவதில்லை. அப்படிப்பட்ட ஒரு வீரத் தியாகி தான் சுப்பிரமணிய சிவா. தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்தின் வத்தலகுண்டு பகுதியில் ராஜம் ஐயர் மற்றும் நாகலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு 1884-ஆம் ஆண்டு அக்டோபர் 4ம் நாள் பிறந்தார். 12 வயது வரை மதுரையில் கல்வி கற்று விட்டு பின்னர் திருவனந்தபுரம் சென்று ஏழை அந்தப் பிள்ளைகளுக்கு இலவச உணவு, உறைவிடம் அளிக்கும் ஆசிரமத்தில் பயின்றார். கோயம்புத்தூரில் பிரவேசத் தேர்வுக்காக படித்து வந்த போது தான் இவரது மனதில் தேச பக்தியும் சுதந்திர வேட்கையும் அரும்பியதாகக் கூறுவர்.

1899ல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்ட சிவாவுக்கு இல்லறத்தை விட தேசப்பணியில் தான் ஆர்வம் அதிகம் இருந்தது போலும்‌. 1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆர்யா சமாஜி தாஹுர்கான் சந்திர வர்மாவின் உரையைக் கேட்டு சிவாவின் தேசபக்'தீ' கொழுந்து விட்டு எரிந்தது. இளைஞர்களின் மனதில் தேசப்பற்றை ஊக்குவிக்கும் விதமான பேச்சுக்களின் மூலம் சுதந்திர உணர்வைத் தூண்டத் தொடங்கினார். தர்ம பரிபாலன சங்கம் என்ற அமைப்பையும்‌ தோற்றுவித்தார். பிரிட்டிஷாரின் கீழ் செயல்பட்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். எனவே சிவாவை திருவனந்தபுரத்தில் இருந்து வெளியேற உத்தரவிட்டது. அங்கிருந்து புறப்பட்டு ஊர்ஊராகச் சென்று சுதந்திர வேட்கையைத் தூண்டும் விதத்தில் சொற்பொழிவாற்றினார். படிப்பு முடிந்த பின்னர் காவல்துறையில் எழுத்தராகச் சேர்ந்த சிவா பணியில் சேர்ந்த அடுத்த நாளே விலகி விட்டார்.

இந்த பயணத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களால் ஏற்கனவே தேசபக்தியில் ஊறிப்போய் இருந்த திருநெல்வேலி சிவாவின் வருகையால் இன்னும் எழுச்சி பெற்றது. சிவா, வ.உ‌.சிக்கு உற்ற தோழரானார். இவர்களோடு‌ பாரதியாரும் சேர்ந்து கொண்டார். 'சிவமும் பிள்ளையும் இல்லையென்றால் நான் ஒரு‌ குருடன்' என்று பாரதியார் கூறியதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். சென்னையில் குடியேறிய பின் பிரபஞ்ச மித்ரன், ஞானபானு என்ற பத்திரிகைகளை நடத்தி வந்தார். பிரிட்டிஷாரால் தேடப்பட்ட பாரதியார் பல்வேறு புனைப் பெயர்களில் மாதப் பத்திரிகையான ஞானபானுவில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் தேசப்பற்றை ஊட்ட உதவினார். 1915-ல் சிவாவின் மனைவி காலமான பின் அவர் தன்னை முழுவதுமாக தேசப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். பொதுவாக தலைவர்கள் கூட்டம் போட்டுப் பேசுவார்கள். சிவாவோ எங்கு மக்கள் கூட்டமாக நிற்கின்றார்களோ அங்கு போய் பேசுவார்.

கலந்து கொள்ளாத மாநாடுகளோ, போராட்டங்களோ இல்லை என்று சொல்லுமளவு எல்லா இடங்களுக்கும் சென்று உரையாற்றிய சிவாவுக்கு காந்தியின் பாலும் ஈர்ப்பு ஏற்பட்டது. எனினும் பாலகங்காதர திலகரின் தீவிரவாதப் போக்கின் மேல் அதீத நப்பிக்கை கொண்டிருந்த சிவா, திலகர் என்றாலே சுதந்திரம் என்று அகராதி பொருள் கூறுமளவு திலகரின் புகழ்‌ பரவ வேண்டும் என்று முழக்கமிட்டார்.

தொழிலாளர்களும் இளைஞர்களுமே தனது திட்டங்களுக்கு உதவியாய் இருப்பார்கள் என்று கருதிய சிவா, தொழிலாளர்‌ போராட்டங்களையும் முன்னெடுத்தார். தூத்துக்குடி கோரல் மில், மதுரை ஹார்வி மில் மற்றும் சென்னை டிராம்வே தொழிலாளர் போராட்டங்களில் பங்கு கொண்டு தொழிலாளர்களுக்கு ஆதரவாய் நின்றார். பல பகுதிகளில் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தி ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடி கொடுத்தார்.

அடிக்கடி சிறை சென்ற சிவாவுக்கு அங்கே தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அதனையும்‌ பொருட்படுத்தாமல் தேசப்பணியில் ஈடுபட்டார். தொழுநோயைக் காரணம் காட்டி ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய ஆங்கிலேய அரசாங்கம் தடை விதித்தது. எனவே உடல் முழுதும் புண்களுடன், ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு கால்நடையாகவும் கட்டை வண்டியிலும் பயணம் செய்து ஊர்ஊராகச் சென்று விடுதலைக் கனலைத் தூண்டினார். அவரது நோய் காரணமாக விடுதலைக்கு ஆதரவான அவரது நண்பர்கள் கூட அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. வயல்வெளியிலும் ஆற்றங்கரைகளிலும் படுத்துறங்கி பாரதத் தாயின் மடியில் தன்னை ஆற்றுப்படுத்திக் கொண்டார்.

பாரதத்தின் மீது அளவில்லாப் பற்றுக் கொண்ட சிவா, பாரதத் தாய்க்கென்று ஒரு கோவில் கட்டி அதில் வ.உ.சி போன்ற தியாகிகளின் உருவச்சிலைகளை உருவாக்க விழைந்தார். அதற்காக தமிழகமெங்கும் சென்று நிதியும் திரட்டினார். ஆனால், அவரது கனவு நிறைவேறவே இல்லை.

ஆன்மீகம்

சிவா கொட்டாரக்கரைக்குச் சென்று சதானந்த சுவாமிகள் என்பவரிடம் ராஜயோகம் பயின்றதாகவும் துறவி போல் காவி உடை அணிந்து கொண்டு 'ஸ்வதந்திரானந்தர்' என்று தனது பெயரையும் மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் மற்றும் விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட சிவா, மோட்ச சாதனை ரகசியம், அருள்மொழிகள், வேதாந்த ரகசியம், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம், ஸ்ரீ ஸ்வாமி விவேகானந்தர் ஆத்மஞான ரகசியம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

சச்சிதானந்த சிவம் என்ற ஆன்மீக நூலை எழுதிய அவர், சிறையின் இருளில் தனது மனதில் பொங்கிய ஆனந்தமான உணர்வுகளையும் தனது குருவிடம் இருந்து கற்றுக் கொண்ட ஆன்மீக தத்துவங்களையும் பற்றி எழுதியதாகக் கூறி சிறையில் தன்னைப் பார்க்க வந்த மனைவி மீனாட்சியம்மைக்கு கொடுக்க ஏதும் இல்லாததால் இந்தப் புத்தகத்தைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

தமிழ்ப்பற்று

இப்போதெல்லாம் பிராமணர்கள் என்றாலே தமிழை நீச பாஷை என்பார்கள், சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிப்பார்கள் என்ற பொய்யான கருத்து தான் தமிழ்ச் சமூகத்தில் விரவி இருக்கிறது‌. ஆனால் பிராமணக் குடும்பத்தில் பிறந்து சமஸ்கிருதமும் கற்றறிந்த சிவா தமிழர்கள் தூய தமிழ் பயன்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.

"வேறுவேறு பாஷைகள் — கற்பாய்நீ

வீட்டு வார்த்தை கற்கிலாய்போபோபோ" என்ற நண்பர் பாரதியின் வார்த்தைகளை ஒட்டி "ஒரு நாட்டின் உயிர் என்பது அந்த நாட்டு பாஷைகளில் இருக்கின்றது. தன் சொந்த பாஷையைக் கற்காதவர்கள், தங்களது பைத்தியக்காரத்தனத்தாலோ அல்லது முட்டாள்தனத்தாலோ தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு ஒப்பானவர்கள். தற்கொலை குற்றமென்றால், சொந்த பாஷையைக் கற்காதது அதுபோல ஆயிரம் மடங்கு குற்றம் செய்வதற்குச் சமம். அரசாட்சி செய்பவர் இதனைக் குற்றமென்று கூறிடினும், சர்வலோகத்தையும் ஆளும் மகாசக்தியின் முன்னர் இவர்களெல்லாம் மன்னிக்க முடியாத குற்றவாளிகள்" என்று தமிழ் மொழியைக் கற்க விரும்பாமல் ஆங்கிலத்தின் பின் ஓடுபவர்களைச் சாடினார் சுப்பிரமணிய சிவா.

சமஸ்கிருதம் கலக்காத தமிழ் பேசப்படவும் எழுதப்படவும் வேண்டும் என்றெண்ணிய அவர் தனது ஞானபானு இதழில், 'உங்களால் தனித்தமிழில் எழுத முடியுமா?

முடியுமானால் எழுதுங்கள். சமஸ்கிருதம் முதலிய அந்நிய பாஷைச் சொற்களில் ஒன்றும் கலவாது தனித்தமிழில் நமது ஞானபானுவில் எட்டுப் பக்கத்துக்குக் குறையாது வரும்படியாக தமிழ்ப் பாஷையின் சிறப்பைப் பற்றியாவது திருவள்ளுவ நாயனாரின் சரித்திரத்தையாவது எழுதுவோருக்கு ரூபா ஐந்து இனாமளிப்பதாகத் தமிழபிமானி ஒருவர் முன்வந்திருக்கிறார்.' என்று ஒரு விளம்பரம் வெளியிட்டார்.

சுதேச மித்திரன் உள்ளிட்ட பத்திரிகைகளை ஆங்கிலம் கலந்த தமிழ் எழுதியதற்காக ஆசிரியரைச் சாடி எழுதினார். திருக்குறளும் திருவள்ளுவ நாயனாரும் சிவாவின் தமிழ்ப்பற்றில் தனி இடம் வகித்தனர். தொழிலாளர் போராட்டத்தை தூண்டி விட்ட குற்றத்திற்காக நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, கொடுங்கோன்மை அதிகாரத்தில் இருந்து குறட்பாக்களை மேற்கோள் காட்டி ஆங்கிலேய அரசின் கொடுங்கோல் ஆட்சிமுறையை விமர்சித்ததால் பத்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை பெற்றார்.

''நான் ஒரு சந்யாசி. முக்தியடையும் வழியைப் பிரச்சாரம் செய்வதே என் வேலை. அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி அதை அடையும் மார்க்கத்தை போதிப்பதே என் வேலை. சகலவிதமான வெளி பந்தங்களினின்றும் விடுவித்துக் கொள்வதே ஆத்மாவிற்கு முக்தியாகும். இதே போன்று ஒரு தேசத்தில் முக்கியமாவது - அந்நிய நாடுகளின் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள்வது; பரிபூர்ண சுதந்திரம் அடைவது. அதையே இந்நாட்டு மக்களுக்கு நான் போதிக்கிறேன். அதாவது, சுதந்திர லட்சியம் அதை அடையும் மார்க்கம். புறக்கணிப்பது - சுதந்திரப் பாதையில் குறுக்கே நிற்கும் எதையும் - சாத்வீக முறையில் எதிர்ப்பது, சுதேச கல்வி இவையேயாகும்.'' என்று முழக்கமிட்ட சுப்பிரமணிய சிவா தொழுநோயின் தாக்கத்தால் ஜூலை 23, 1925 அன்று உயிர் நீத்தார். இன்று தேசியம், ஆன்மீகம், தமிழ்ப்பற்று ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பல தேச விரோத சக்திகள் ஈடுபட்டுள்ளனர். அன்று வியாபாரம் என்று வந்து அடிமைத் தளை பூட்டியவர்கள் விட்டுச் சென்ற எச்சங்கள், எங்கே பாரதம் ஒற்றுமையாய் இருந்து முன்னேறிவிடுமோ என்ற அச்சத்தில் சுப்பிரமணிய சிவா போன்ற வீரச் செம்மல்களின் வரலாற்றை இருட்டடிப்பு செய்தது துரதிருஷ்ட வசமானது. அவரது நினைவு நாளிலேனும் இத்தகைய முன்னோர்களின் வாழ்வைப் பற்றி அறிந்து அவர்களின் கனவை நனவாக்க பாடுபடுவோம்.

References

https://sites.google.com/site/desabaktharkal/home/cuppiramaniya-civa

https://www.panippookkal.com/ithazh/archives/13826

Next Story