பெண்ணுரிமையாவது புண்ணாக்காவது, மனைவி கோவிலுக்கு போவதைத் தடுக்க என்ன செய்தார் ஈ.வெ.ராமசாமி?
பெண்ணுரிமையாவது புண்ணாக்காவது, மனைவி கோவிலுக்கு போவதைத் தடுக்க என்ன செய்தார் ஈ.வெ.ராமசாமி?

பெரியார் படத்தைப் போட்டுக் கொண்டு பகுத்தறிவு சொல்லித் தருகிறேன் என்று இந்து மத நூல்களையும் நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தி சுய இன்பம் காண்பதே திராவிடர் கழக அடிப்பொடிகளின் வழக்கம். 'அந்தப் புராணத்தில் ஆபாசம் இருக்கிறது, இந்த இதிகாசத்தில் அசிங்கமாக எழுதியிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு ஆன்மீக நூலா? இது தான் இந்து மதத்தில் கடவுள் பக்தியா? மனுசனா கூட மதிக்க முடியாதவன கடவுளா எப்படி கும்பிடுவத' என்றெல்லாம் கூப்பாடு போடுவார்கள்.
சமஸ்கிருதத்தைப் படிக்காதே என்பார்கள்; ஆனால், அவர்கள் படித்தது போல ஸ்லோகங்களுக்கு எல்லாம் அர்த்தம் சொல்வார்கள். அள்ள அள்ளக் குறையாத சனாதன தர்ம சாஸ்திரங்களையும் ஸ்மிருதிகளையும் ஆபாசம், அருவருப்பு என்பவர்கள் தங்கள் தலைவன் ஈ.வே.ராமசாமியைப் பற்றி 'ஆகா! ஓகோ!' வென்று புகழ்வார்கள்; பெண்கள் முன்னேற்றமே அவரால் தான் என்று வாய் கூசாமல் புளுகுவார்கள். வாய் நிறையச் சொல்லும் ஸ்லோகமானாலும், கை வலிக்க செதுக்கிய சிற்பமானாலும் இவர்கள் கண்களுக்குத் தெரிவது ஆபாசம் மட்டுமே. இதற்கெல்லாம் ஆரம்பம் என்ன என்று யோசிப்போர் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.
அதில் ஒரு பகுதியை திராவிடர் கழக கூட்டத்தின் பார்வைக்காக பதிவிட்டிருக்கிறார் எழுத்தாளர் ம.வெங்கடேசன். விழாக் காலங்களில் எப்பொழுதாவது கோவிலுக்கு செல்லும் வழக்கம் கொண்டிருந்த தனது மனைவி நாகம்மையின் பழக்கத்தை மாற்ற நினைத்த ராமசாமி நாயக்கர், ஒரு முறை நாகம்மை சில பெண்களுடன் கோவிலுக்குச் சென்ற போது தனது நண்பர்களுடன் மாறு வேடத்தில் சென்று நண்பர்களை தனது கட்டிய மனைவியின் மீதே ஏவி விட்டிருக்கிறார்.
மைனர் வேடம் போட்டுக் கொண்டு சக மைனர்களிடம் "இவள் யாரோ புதிய தாசி; நமது ஊருக்கு வந்திருக்கிறாள்; இவளை நம் வசமாக்க வேண்டும்; நீங்கள் அவளது நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள்" என்று தாராள மனதுடன் கூறியுள்ளார். உடனே அவர்களும் நாகம்மை இருந்த இடத்திற்கு சென்று கேலி செய்ய, அன்று உடல் வெலவெலத்துப் போனவர் பின்னர் கோவிலுக்கே செல்லவில்லை என்று ராமசாமி நாயக்கரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றன.
இதிலிருந்து மூன்று விஷயங்கள் புலப்படுகின்றன.
1)கோவிலுக்குப் போவதும் போகாததும் ஒரு நபரின் தனிப்பட்ட விருப்பம்
2)ஒரு பெண்ணால் இந்த சாதாரணமான விஷயத்தில் தானாக, தெளிவாக முடிவெடுக்க முடியும்
3)கட்டுப்பாடுகள் மிகுந்த வாழ்க்கைமுறை கொண்ட ஒரு காலகட்டத்திலேயே ராமசாமி நாயக்கர் தனது சொந்த மனைவியிடமே நண்பர்களை ஏவிவிட்டு இவ்வளவு ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டுள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு விஷயத்திலேயே தனது மனைவியைத் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட விடாத ராமசாமி நாயக்கரை பின்பற்றுபவர்கள் தான் பேச்சுரிமை, பெண்ணுரிமை, ஆபாசத்தைப் பற்றி எல்லாம் பேசி இன்று நகைப்புக்குள்ளாகிறார்கள்.