தமிழகத்தில் குறுவை சாகுபடியை தேசிய வேளாண் மேம்பாட்டு திட்டம் ஊக்குவிக்கிறது.!
தமிழகத்தில் குறுவை சாகுபடியை தேசிய வேளாண் மேம்பாட்டு திட்டம் ஊக்குவிக்கிறது.!
By : Kathir Webdesk
கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள சிரமநிலையிலிருந்து நாடு மீண்டு வருவதற்கு விவசாயிகளின் அயராத உழைப்பு நிச்சயம் உதவும். வரும் நவம்பர் மாதம் வரை ரேசன் கடைகள் மூலம், இலவச அரிசி அல்லது கோதுமை மற்றும் பருப்பு வகைகள் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஜூலை மாதத்துக்கான இலவச ரேசன் அரிசி வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் அபரிமித விளைச்சல் நாட்டின் உணவு பாதுகாப்புக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். தேசிய வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் ,தீவிர நெல் சாகுபடி முறையைக் கடைப்பிடிக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். தீவிர நெல் சாகுபடி முறை என்பது வறண்ட காலத்தில் உறுதி செய்யப்பட்ட பாசனத்துக்கு வழிவகுக்கும் என வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வயலில் நாற்று நடவுக்கு முன்பாக , நெல் நாற்றாங்கால் தயாரிக்கப்படும். 100 சதுர மீட்டரில் நாற்றங்காலில் உருவாக்கப்படும் நெல் நாற்று, ஒரு ஹெக்டேரில் நடப்பட வேண்டும். நாற்றுக்களின் வேர்கள் மண்ணில் ஆழமாகச் சென்று விடாமல் தடுக்கும் வகையில் , பிளாஸ்டிக் விரிப்போ, சாக்குப் பைகளோ பயன்படுத்தப்படும். நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் சீராக விதைக்கப்பட்டு, அவை காய்ந்த மண்ணால் மூடப்படும். 15 நாட்களுக்குப் பின்னர், நாற்றுக்களைப் பிடுங்கி வயல்களில் நட வேண்டும்.
தமிழகத்தில் அரிசி களஞ்சியமான தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் , அரியலூர் மாவட்டங்களின் சில பகுதிகள் ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் குறுவை சாகுபடி நடைபெறும். செப்டம்பர் மாதத்தில் , 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக உணவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் , இதுவரை 521 கொள்முதல் நிலையங்கள் மூலம் , 26.24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால், காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்குப் பயன்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து தற்போது 15000 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் சீராக தண்ணீர் திறக்கப்படுவதால், திருச்சிராப்பள்ளியில், விவசாயிகள் குறுவை சாகுபடியைத் தொடங்கியுள்ளனர். திருவாசி, மணச்சநல்லூர் போன்ற கிராமங்களைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் நாற்றுக்களை நடவு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து சரியான நேரத்தில் அதிக தண்ணீர் திறக்கப்படுவதால்,, கடந்த ஆண்டு 3300 ஹெக்டேராக இருந்த திருச்சி குறுவை நெல் சாகுபடி, இந்த ஆண்டு 4800 ஹெக்டேராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுவதாக மூத்த வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இம்மாத இறுதி வாக்கில் நாற்று நடவுப் பணிகள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமோக அறுவடை, நாட்டின் உணவு பாதுகாப்புக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும். மேலும், கொவிட்-19 தொற்றால் பெரும் இழப்புக்குள்ளாகி, அதிலிருந்து மீண்டு வரும் லட்சக்கணக்கானோரின் பசியாற்ற அரசுக்கு கூடுதலாக உதவும்.