சீன அரசை விமரிசிக்கும் வெளிநாடு வாழ் சீனர்களை பிடிக்க 'நரி வேட்டை திட்டம்' மீண்டும் அமல் - சொந்த மக்களை நசுக்கும் சீனாவின் கோரமுகம் பற்றி ஒரு அலசல்.!
சீன அரசை விமரிசிக்கும் வெளிநாடு வாழ் சீனர்களை பிடிக்க 'நரி வேட்டை திட்டம்' மீண்டும் அமல் - சொந்த மக்களை நசுக்கும் சீனாவின் கோரமுகம் பற்றி ஒரு அலசல்.!

வெளிநாடுகளில் வசித்துவரும் சொந்த குடிமக்களை குறிவைத்து சீனா நரி வேட்டை என்ற பெயரில் ரகசிய திட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குனர் கிறிஸ்டபர் ரே, இந்த விவகாரம் தொடர்பாக தமது பார்வைக்கு வந்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் உளவு செயல்பாடுகளில் எஞ்சிய நாடுகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், வெளிநாடுகளில் வசித்துவரும் சொந்த நாட்டவர்களை தற்போது சீனா குறிவைத்து வருவதாக அவர் பின்வருமாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் வசித்துவரும் அரசின் கொள்கைகளை எதிர்க்கும் சீனர்கள், விமர்சகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் தொடர்ந்து சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டுவது தலைவலியை ஏற்படுத்தும் என கருதும் ஷி ஜின்பிங் அரசு இவர்களுக்கு மிரட்டல் விடுத்து சீனாவுக்கு வரவழைக்கும் நடைமுறைகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக நரி வேட்டை என்ற ரகசிய திட்டத்தை ஷி அரசு அமுலுக்கு கொண்டுவந்துள்ளதாகவும் கிறிஸ்டபர் ரே தெரிவித்துள்ளார்.
இதனால் இவர்களை வலுக்கட்டாயமாக சீனாவுக்கு வரவழைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கிறிஸ்டபர் ரே சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக சீனா நிர்வாகம் முன்னெடுக்கும் நடவடிக்கை திகிலை கிளப்பும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. நரி தனது வேட்டைக்கு உகந்த இரை சிக்காத போது, வெளிநாட்டில் வசிக்கும் அவர்களின் குடும்பத்தாருடன் ஒரு சந்திப்புக்கு சீன அரசின் பிரதிநிதி ஒருவர் அனுப்பப்படுவார். அவர் அந்த குடும்பத்தாரிடம் இரண்டு தகவலை பகிர்ந்து கொள்வார். மொத்த குடும்பத்துடன் சீனாவுக்கு திரும்புங்கள் அல்லது, கூட்டாக தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்பதே அது.
2015 ஆம் ஆண்டு சீனாவில் ஊழல் புகார் முன்வைக்கப்பட்ட நபர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட திட்டமாகும் இந்த நரி வேட்டை. ஆனால் தற்போது அதே திட்டத்தை வெளிநாட்டு வாழ் சீனர்களுக்கு எதிராகவும் முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, இதுபோன்ற மிரட்டலுடன் அமெரிக்காவில் வசிக்கும் சீன குடும்பத்தினரிடம் எவரேனும் அணுகினால் உடனடியாக எஃப்.பி.ஐ அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் ரே கோரிக்கை வைத்துள்ளார்.
பொருளாதார உளவு நடவடிக்கை, தகவல் திருட்டு, அரசியல் தொடர்பான அத்துமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சீனா முக்கிய நாடுகளில் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட ரே, அமெரிக்காவில் ஒவ்வொரு 10 மணி நேரத்திலும் சீனா தொடர்பான ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது அமெரிக்காவில் இதே விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் 5,000 வழக்குகளில் பாதிக்குமேல் சீனா தொடர்பானது என கிறிஸ்டபர் ரே குறிப்பிட்டுள்ளார்.
eithy.com/breifNews.php?newsID=248927&category=WorldNews