ஆப்கானிய இந்துக்கள், சீக்கியர்களுக்கு நீண்டகால விசா - ஒடுக்கப்படும் சிறுபான்மையினருக்கு உதவும் மோடி அரசு.!
ஆப்கானிய இந்துக்கள், சீக்கியர்களுக்கு நீண்டகால விசா - ஒடுக்கப்படும் சிறுபான்மையினருக்கு உதவும் மோடி அரசு.!

கடந்த மார்ச் மாதத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு சீக்கிய குருத்வாரா மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்குப் பின்னர் சில நாட்களுக்கு முன் அனுராக் சக்தேவா என்ற சீக்கிய தலைவர் கடத்தப்பட்டார். தற்போது அவர் விடுவிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதையொட்டி ஆப்கானிஸ்தானில் வாழும் சிறுபான்மையின சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை இந்தியா அழைத்து வர இந்திய அரசு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் சுதந்திர தினத்திற்குள் கிட்டத்தட்ட 700 சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு நீண்ட கால விசா அளித்து அவர்கள் இந்தியா வர தேவையான நடைமுறைகள் அனைத்தையும் முடிக்க வெளியுறவுத்துறை விரைவாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குருத்வாராவில் நடந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த நிகழ்வுக்குப் பின்னர் 600 சீக்கியர்கள் இந்தியாவில் வாழ நீண்டகால விசா கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விசாவுக்கு விண்ணப்பித்த 700 பேருக்கு தேவையான நடைமுறைகளை விரைவில் முடித்து, விசா அளித்து ஆகஸ்டு 15க்குள் அவர்கள் இந்தியா வர ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இவர்களில் இந்தியாவில் உறவினர்கள் உள்ளவர்களும் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்களும் அடங்குவர் என்று தெரிகிறது.
கடத்தப்பட்ட அனுராக் சக்தேவாவை விடுவிக்க பாடுபட்ட ஆப்கன் தலைமை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பழங்குடியின தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் அனுராக் சக்தேவா குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் அவருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர் 1990களிலேயே தனது குடும்பத்துடன் இந்தியாவில் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Credits: Opindia