ஜெர்மனியில் வொர்க் பெர்மிட் பெறுவதற்கு தேசிய வடிவமைப்பு கல்வி நிலையங்களின் மாணவர்கள் எளிதில் விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு.!
ஜெர்மனியில் வொர்க் பெர்மிட் பெறுவதற்கு தேசிய வடிவமைப்பு கல்வி நிலையங்களின் மாணவர்கள் எளிதில் விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு.!

இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT), உலகத்தரத்திலான வடிவமைப்புக் குறித்த கல்வியை வழங்குவதற்காக இந்தியாவில் 5 தேசிய வடிவமைப்பு கல்வி நிலையங்களை (NID) உருவாக்கி உள்ளது.
அகமதாபாத்தில் உள்ள என்.ஐ.டி (அகமதாபாத், காந்திநகர் மற்றும் பெங்களூருவில் உள்ள கல்வி வளாகங்கள்) 1961லேயே இயங்கத் தொடங்கின. ஏனைய 4 புதிய என்.ஐ.டி-கள் – என்.ஐ.டி ஆந்திரப்பிரதேசம், என்.ஐ.டி. ஹரியானா, என்.ஐ.டி அசாம் மற்றும் என்.ஐ.டி மத்தியப்பிரதேசம் – கடந்த சில ஆண்டுகளாக செயல்படத் தொடங்கி உள்ளன.
நாடாளுமன்றச் சட்டத்தின்படி இந்த என்.ஐ.டி-கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்விநிலையங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச அளவில் இவை முன்னணி வடிவமைப்பு கல்வி நிலையங்களாகவும் புகழ்பெற்று உள்ளன.
என்.ஐ.டி-யில் படித்து வெளிவரும் பட்டதாரி மாணவர்கள் இந்தியாவின் பல்வேறு துறைகளில் பணிபுரிவதோடு பல்வேறு வெளிநாடுகளிலும் சவாலான பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த மாணவர்கள் ஜெர்மனியிலும் பணியில் உள்ளனர். வெளிநாடுகளில் பெறப்படும் கல்வித் தகுதிகளை மதிப்பீடு செய்து அங்கீகாரம் அளிப்பதற்காக ஜெர்மனியில் அயல்நாட்டு கல்விக்கான மத்திய அலுவலகம் (ZAB) செயல்படுகிறது.
தங்களுடைய சேவையின் ஒரு பகுதியாக இந்த அலுவலகம் அனாபின் என்ற தரவுத் தொகுப்பை பராமரிக்கிறது. அயல்நாடுகளில் பெறப்படும் பட்டங்கள் மற்றும் உயர்கல்வித் தகுதிகளை ஜெர்மன் நாட்டில் வழங்கப்படும் பட்டம் மற்றும் பட்டயங்களுடன் ஒப்பிட்டு தரப்பட்டியலை இந்த அலுவலகம் பராமரிக்கிறது.
ஜெர்மன் ஒர்க் விசா, வேலை தேடுவோர் விசா அல்லது ஜெர்மன் புளூ கார்ட் ஆகியவற்றைப் பெறுவதற்கு அயல்நாடுகளில் பெற்ற பல்கலைக்கழக அளவிலான தகுதி ஜெர்மனி நாட்டில் அங்கீகரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஜெர்மனிக்கு வெளியில் பிற அயல்நாடுகளில் பெறப்பட்ட பல்கலைக்கழக அளவிலான கல்வித்தகுதி ஜெர்மன் நாட்டு கல்வித்தகுதிக்கு சமமாக இருக்கிறது என்ற அத்தாட்சி சான்றிதழைப் பொறுத்துதான் விசா விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது.
பொதுவாக 3/4 வருட இளநிலைப் பட்டமானது ஜெர்மனி நாட்டின் அடிப்படைத் தகுதிகளை நிறைவு செய்வதாக இருக்க வேண்டும்.
என்.ஐ.டி அகமதாபாத் 2015-லேயே இந்த அனாபின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது. இதர புதிய என்.ஐ.டி-கள் இந்த தரவுத் தொகுப்பில் அண்மையில் சேர்க்கப்பட்டு உள்ளன.
தற்போது இந்தியாவின் அனைத்து என்.ஐ.டிகளும் இந்தப் பட்டியில் இடம் பெற்று உள்ளன. ஆகையால் இந்தக் கல்வி நிலையங்களின் மாணவர்கள் தங்கள் கல்விக்கேற்ற பிரிவுகளில் வேலை செய்ய ஜெர்மனி செல்வதற்கு வொர்க் பெர்மிட் விண்ணப்பிப்பது எளிதாகும்.