கேரள தங்கக் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க உத்தரவு - அதிர்ச்சியில் கம்யூனிஸ்ட்கள்!
கேரள தங்கக் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க உத்தரவு - அதிர்ச்சியில் கம்யூனிஸ்ட்கள்!

தூதரக பயண உடைமைகள் என்று கூறி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்திய வழக்கில் தேசிய புலனாய்வு முகமையை விசாரிக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. திட்டமிட்டு நடந்த இந்த கடத்தல் சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல தரப்பினரும் இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று கூறி வந்த நிலையில் எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என்று கூறியதோடு பிரதமர் தலையிட்டு இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட ஆவண செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார்.
கடந்த ஞாயிறன்று திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் இருக்கும் அந்நாட்டின் தூதரகத்திற்கு வந்த விமான சரக்கு பெட்டகத்தை கைப்பற்றி சுங்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது இந்த தங்க கடத்தல் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இந்த ஆய்வில் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் இந்த தங்கத்தை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இவர் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் அலுவலகத்தில் ஆலோசகராகவும் பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் தான் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைச்சகம் முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கே அதிகமாக ஒப்பந்தங்களை வழங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இந்த பிரச்சினை பெரிதாகாமல் சமாளிக்க தனது செயலாளர் சிவசங்கரை முதல்வரின் தனிச் செயலர் பதவியிலிருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. எனினும் முதல்வரால் நேரடியாக கட்டுப்படுத்தப்படும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலராக சிவசங்கர் நீடித்து வருகிறார்.
கேரள தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிறுவனத்தின் கீழ் உள்ள ஸ்பேஸ் பார்க்கில் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட ஸ்வப்னா சுரேஷ் ஆப்பரேஷன்ஸ் மேனேஜர் என்ற பதவியில் பணிபுரிய அதிகாரி சிவசங்கர் உதவியதாக கூறப்படுகிறது. கேரள பத்திரிகை மனோரமாவில் வெளியான செய்தியின் படி திருவனந்தபுரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த ஸ்வப்னாவின் வீட்டுக்கு சிவசங்கர் அடிக்கடி வந்து சென்றதாக குடியிருப்பு வாசிகள் கூறியுள்ளனர். ஸ்வப்னாவின் மொபைல் போன் அழைப்புகள் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் பல தலைவர்களுடன் அவர் தொடர்பில் இருந்ததை காட்டிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
நன்றி: ஸ்வராஜ்யா