தமிழக மீனவர்கள் படகுகளைக் பராமரித்து மீன்பிடித் தொழிலை தொடர இ-பாஸ் வழங்க வேண்டும் - முதல்வர் பினராயிக்கு தமிழக முதல்வர் கடிதம்.!
தமிழக மீனவர்கள் படகுகளைக் பராமரித்து மீன்பிடித் தொழிலை தொடர இ-பாஸ் வழங்க வேண்டும் - முதல்வர் பினராயிக்கு தமிழக முதல்வர் கடிதம்.!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு கேரள துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள அவர்களது மீன்பிடி படகுகளை பராமரிக்கவும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவும் அனுமதி வழங்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஊரடங்கால் கேரளாவில் மீன்பிடித்து வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளை கேரள கடற்கரையிலேயே விட்டுவிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அவை பராமரிப்பின்றி கடற்கரை மீன்பிடி துறைமுகங்களில் நிற்கின்றன. இதனால் 25,000 மீனவக் குடும்பங்கள் கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 350 இயந்திரப் படகுகளும் 750 நாட்டுப் படகுகளும் பல்வேறு மேற்குக் கடற்கரையோர மீன்பிடித் துறைமுகங்களிலும் மீன் இறக்கும் மையங்களிலும் நிறுத்தி வைக்கப்படுள்ள நிலையில் அவற்றைப் பராமரிக்க தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வகையில் மீனவர்களுக்கு இபாஸ் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மேற்குக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடைக் காலம் இந்த மாத இறுதியில் முடிவடைவதால் ஆகஸ்ட் ஒன்று முதல் மீன்பிடித் தொழிலைத் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.