Kathir News
Begin typing your search above and press return to search.

இரானின் சாபகர் ரயில் அமைப்பு திட்டம் கிடைக்காததால் இந்தியாவுக்கு எந்த நஷ்டமும் கிடையாது: இது சீனா - பாகிஸ்தானின் சூழ்ச்சியே என தகவல்கள்.!

இரானின் சாபகர் ரயில் அமைப்பு திட்டம் கிடைக்காததால் இந்தியாவுக்கு எந்த நஷ்டமும் கிடையாது: இது சீனா - பாகிஸ்தானின் சூழ்ச்சியே என தகவல்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 July 2020 2:50 AM GMT

இரானின் சாபகர் ரயில் அமைப்பு திட்டம் கிடைக்காததால் இந்தியாவுக்கு ஒரு பைசா கூட நஷ்டம் கிடையாது: இது இந்திய - ஆப்கானிய உறவுக்கு உலை வைக்கும் சீனா - பாகிஸ்தானின் சூழ்ச்சியே என தகவல்கள்

ஆப்கனிஸ்தான் நிலத்தால் சூழப்பட்ட நாடு. கடல் வழி மார்க்கம் கிடையாது. கப்பல் மூலம் வரும் பொருட்கள் கராச்சி துறைமுகத்தில் இறங்கி, அங்கிருந்து லாரிகள் மூலம் ஆப்கனிஸ்தானுக்கு கொண்டு செல்லப்படுவதுதான் வழக்கம். இந்தியாவில் இருந்து கோதுமை லாரிகள் நேரடியாக ஆப்கான் செல்ல வேண்டுமென்றால், அவை பாகிஸ்தான் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதற்கு பாகிஸ்தான் அனுமதி வேண்டும்.

தன்னுடைய வர்த்தகம் பாதிக்கும் என்பதாலும் இந்தியாவுடனான மோதல் காரணமாகவும் இதுபோன்ற ஒரு ஏற்பாட்டுக்கு பாகிஸ்தான் சம்மதிப்பதில்லை. சரக்கு விமானங்கள் மூலம் கொண்டு சென்றால், செலவு அதிகரிக்கும். என்ன செய்யலாம் என யோசித்த வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்தியாவின் மூளையில் உதித்ததுதான் சபாகர் துறைமுகத் திட்டம்.

ஈரான் நாட்டின் தென்முனையில் ஓமன் வளைகுடாவில் அமைந்த இயற்கையான துறைமுகம் சபாகர். இங்கு துறைமுகம் அமைப்பது தொடர்பாக ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல ஆண்டுகள் முன்பே ஒப்பந்தம் போடப்பட்டது. 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயும் குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஈரான் அதிபர் கடாமியும் கையெழுத்திட்டனர்.

சபாகர் துறைமுகம் மூலம் பெர்சிய வளைகுடா நாடுகள், ஆப்கனிஸ்தான், மத்திய ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் கடல்வழி மற்றும் சாலைப் போக்குவரத்து வசதிகளை உருவாக்கி வர்த்தகத்தை அதிகரிப்பதுதான் இரு நாடுகளின் நோக்கமும்.

ஆனால், அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக இந்தத் திட்டம் நிறைவேறாமல் முடங்கியது. அணு ஆயுத பரவல் தடுப்பு விவகாரம் தொடர்பாக, அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதார தடைகளைக் கொண்டுவந்தது. இதனால் இந்தத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. அதன்பிறகு, அணு ஆயுதம் தொடர்பாக ஈரானுடன் ஒப்பந்தம் உருவானதால், மீண்டும்2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் அமைச்சர் சல்மான் குர்ஷித் இரான் பயணம் மூலம் இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியது. ஆனால் ஒப்பந்தப்படி பணிகள் தொடங்கி நடைபெறுவதில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி இந்தியா வந்தார். பிரதமர் மோடியை சந்தித்து சபாகர் திட்டம் குறித்து வலியுறுத்தினார். அடுத்த ஆண்டே இந்தியா - ஆப்கனிஸ்தான் - ஈரான் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, அடுத்தடுத்து வேலைகள் வேகமாக நடந்தன. ரூ.549 கோடியில் சபாகர் துறைமுகத்தின் முதல் கட்டப் பணிகள் முடிந்து, 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. இதன்படி, இங்கு 2 பெர்த்துகளை இந்தியா இயக்கி வருகிறது.

இந்தியாவில் இருந்து வரும் சரக்குக் கப்பல்கள் இங்கு தங்கிச் செல்கிறது. எரிபொருள் வளமிக்க ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் இந்தியாவில் இருந்து ஈரான் மற்றும் ஆப்கனிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்தத் துறைமுகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது தொடங்கிய சமயத்தில் இந்த துறைமுகம் ஆண்டுக்கு 25 லட்சம் டன் சரக்குகளை மட்டுமே கையாளும் திறன் கொண்டதாக இருந்தது . இதை படிப்படியாக ஆண்டுக்கு 8 கோடி டன்னாக அதிகரிப்பதுதான் அடுத்த திட்டமாக இருந்தது.

இந்த திட்ட விரிவாக்கப்படி ஈரானில் இருக்கும் சாபஹார் துறை முகத்தில் இருந்து ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருக்கும் ஷாஹேடன் பகுதிக்கு இந்தியா சார்பாக ரயில்வே பாதை அமைக்க ஒரு கூட்டு திட்டம் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆப்கானிஸ்தான் உடன் ஈரானை ரயில் மூலமாக இணைக்க இந்த திட்டம் வழியாக அமையும் என்று கூறப்பட்டது. இந்த ரயில்வே திட்டத்திற்கான ஒப்பந்தம் இந்திய ரயில்வே, ஈரானியன் ரயில்வே மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த 2016ல் செய்யப்பட்டது. ஆனால் இந்திய ரயில்வே செய்ய எடுத்துக் கொண்ட இந்த ஒப்பந்தம் அமெரிக்கா ஈரான் மீது பிறப்பித்த பொருளாதார வர்த்தக தடைகளை அடுத்து இந்தியாவால் ஈரான் சென்று மேற்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான முத்தரப்பு ஒப்பந்தத்தில் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து வழிப்பாதையின் ஒரு பகுதியாக சபஹார்-ஜாகேதன் ரயில்வேயை நிர்மாணிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தது. IRCON இந்த திட்டத்திற்கான அனைத்து சேவைகளையும், சூப்பர் ஸ்ட்ரக்சர் பணிகளையும், சுமார் 6 1.6 பில்லியன் நிதியுதவியையும் வழங்குவதாக உறுதியளித்தது.

இருப்பினும், IRCON பொறியியலாளர்களின் பல வருகைகள் மற்றும் ஈரானிய இரயில்வேயின் ஏற்பாடுகள் இருந்தபோதிலும், இந்தியா இந்தப் பணிகளை உடனடியாக துவக்கவில்லை. அமெரிக்கா, சபாஹர் துறைமுகம் மற்றும் இரயில் பாதைக்கு பொருளாதாரத் தடை தள்ளுபடி அளித்திருந்தது. ஆனால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தில் பிற நாடுகள் யாரும் உபகரணங்களை கொடுக்கவோ விற்கவோ முன்வராதது இந்தியாவுக்கு ஒரு பெரிய தடையாக இருந்தது.

அமெரிக்க பொருளாதாரத் தடைகள் காரணமாக இந்தியா ஏற்கனவே ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக நிறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரான் மீதான அமெரிக்க தடையை சீனா சமீபத்தில் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் உட்பட பல ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டதால் இந்திய ரயில்வே மேற்கொள்ளவிருந்த ஒப்பந்தத்திற்கு ஈரான் தடை வித்திதிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இரானில் இந்தியா மேற்கொள்ளவிருந்த ரயில்வே பணிகளுக்கான ஒப்பந்தம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்தான். காலதாமதம் ஆவதால் இந்த திட்டத்தை தாங்களே செய்து கொள்ளப்போவதாக ஈரானால் சொல்லப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஏனெனில் இந்தியா நிதி ஒதுக்கி இந்த திட்டத்தை தொடங்கவே இல்லை. இதுவரை செலவு செய்யப்படவும் இல்லை, இந்த நிலையில் இந்தியாவுக்கு இது நஷ்டமில்லை, மேலும் இந்தியா அங்கு ஆப்கானிஸ்தானுக்கான பல திட்டங்களை திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அந்த திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஒப்பந்தப்படி அந்த திட்டங்களில் ஆப்கானிஸ்தானும் ஒரு பங்குதாரர் என்பதால் இந்தியாவின் ஏற்றுமதி ஆப்கானிஸ்தானுக்கு நடந்து கொண்டுதான் இருக்கும்,

ஈரானின் இந்த திடீர் முடிவு சீனாவால் தூண்டி விடப்பட்டதாக இருக்கலாம் என்றும், மேலும் பாகிஸ்தானையும், சீனாவையும் வெறுத்து இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பகையூட்டும் முயற்சியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் கூறுவது போல இந்தியாவுக்கு இந்த ரயில்வே திட்ட ஒப்பந்தம் கிடைக்கததால் எந்த நஷ்டமும் இல்லை. மேலும் இரானால் இந்தியாவை ஒருபோதும் மற்ற விவகாரங்களில் கழற்றிவிட முடியாது. ஏனெனில் இந்தியாவின் பன்னாட்டு அரசியல் சூழ்நிலைகளை புரிந்து கொண்ட நாடு ஈரான். சீனாவின் நேர்மை பற்றி ஈரானுக்கு நன்றாக தெரியும். அவர்களுக்காக முழுமையாக இந்தியாவை ஈரான் கழற்றி விடாது.

ஒரு வேளை அப்படி செய்தால் ஆப்கானுக்கு உதவ இந்தியாவுக்கு மாற்று வழி உண்டு.. அதன்படி இரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் துறைமுகம் நோக்கி இந்தியா புதிய கடல் வழியை திறந்துள்ளது. இதன் மூலமும் நாம் ஆப்கனுடன் வர்த்தகம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இரானின் இந்த நடவடிக்கைக்கு காரணம் சீனா, ஈரானுடன் மிகப்பெரிய அளவில் 25 ஆண்டுகால 400 பில்லியன் டாலர் ராணுவ-பொருளாதார கூட்டுறவு மேற்கொள்வதை இறுதி செய்ததுதான் என்றும் கூறப்படுகிறது. அதன்படி சீனா இந்த திட்டம் மூலம் ஈரானில் பல்வேறு சாலை பணிகள், ரயில்வே பணிகள், மற்றும் துறைமுக பணிகளை பாகிஸ்தானில் தான் ஏற்படுத்தியுள்ள அகன்ற தரை வழி சாலைகள் மூலமும் செய்யவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவை சாபஹார் துறைமுகத் திட்டத்திலிருந்து ஈரான் கழற்றி விட்டுள்ளது. இது இந்தியாவுக்கு பெரிய நஷ்டம்" என்று சாடியுள்ளார். இது காங்கிரஸ்காரர்களின் முதிர்ச்சியற்ற கருத்து என் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Next Story