புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதி!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதி!

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட மூன்று இடங்களில், மூன்று பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139 ஆக உயர்ந்து ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 337 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருப்பதால் டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் மார்ச் 31ம் தேதிவரை திரையரங்குகள் மூடப்படுகிறது. இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் 3 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை, அரசு மார்பக புற்றுநோய் மருத்துவமனை மற்றும் பிம்ஸ் தனியார் மருத்துவமனைகளில் மூன்று பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடத்திலும் ரத்தமாதிரிகள் பரிசோதனை செய்யப்படும் நிலையில் முதல் 10 மாதிரிகள் சோதனை செய்து பின் புனே ஆய்வுக்கூடத்தின் அறிக்கையுடன் ஒப்பிட்டு இதன் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்படும். மேலும் இந்த ஆய்வின் முடிவுகள் நாளையே தெரியவரும் என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.