சதீஷ்காரில் நிலக்கரி கொண்டுவர மாமுல் வசூலிப்பு - காங்கிரஸ் தலைவர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
சதீஷ்காரில் நிலக்கரி கொண்டுவர மாமூல் வசூல் பெற்றதாக கூறப்படும் வழக்கில் அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
By : Karthiga
சதீஷ்கார் மாநிலத்தில் முதல் மந்திரி பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. அங்கு நிலக்கரியைக் கொண்டு வரவும் வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லவும் மாமூல் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது . ஒரு டன் நிலக்கரிக்கு குறிப்பிட்ட தொகை வீதம் மாமூல் பெறப்பட்டுள்ளது . உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் இடைத்தரகவர்கள் ஆகியோர் அடங்கிய குழு இந்த வசூலிப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதில் நடந்த பெருமளவிலான ஊழல் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. மாநில ஆட்சி பணி அதிகாரி சௌராஷியா, சூரியகாந்த் திவாரி அவருடைய உறவினர் லட்சுமி காந்த் திவாரி , சத்தீஸ்கார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சமீர் பிஷ்னோய், நிலக்கரி தொழிலதிபர் சுனில் அகர்வால் ஆகியோர் உட்பட ஒன்பது பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஆதாயமடைந்தவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று சத்தீஸ்கார் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது .
காங்கிரஸ் தலைவர்கள் எம்.எல்.ஏக்கள் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சத்தீஸ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மூன்று நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இம்மாதம் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மாநாடு நடக்கிறது .2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு மூன்று நாட்களே இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையில் நடத்திய சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.