“காங்கிரஸ்தான், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து, தனிக்கொடி, தனி பிரதமர், தனி அரசியல் என கொடுத்தது; பா.ஜ.க அல்ல” - வைகோவின் அடுத்த முழக்கம்!!
“காங்கிரஸ்தான், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து, தனிக்கொடி, தனி பிரதமர், தனி அரசியல் என கொடுத்தது; பா.ஜ.க அல்ல” - வைகோவின் அடுத்த முழக்கம்!!
By : Kathir Webdesk
காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் சட்ட மசோதா மேல் சபையில் கொண்டு வந்தபோது வைகோ, அதை எதிர்த்து பேசினார். அப்போது காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்தார். காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ்தான் முதல் துரோகம் செய்தது என்று குற்றம் சாட்டினார்.
இதனால், ஆவேசம் அடைந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில், “வைகோ யாருக்குமே விசுவாசமாக இருக்க மாட்டார். 18 ஆண்டுகள் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக தேர்வு செய்து அழகு பார்த்த தி.மு.க.வுக்கு வைகோ பச்சை துரோகம் செய்தார்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்து வைகோ கூறியிருப்பதாவது:-
ஒரு இனத்தையே அழித்தவர்கள் காங்கிரசார். எனவே, அவர்கள் தயவில் ஒரு போதும் நான் பாராளுமன்றத்துக்கு செல்லமாட்டேன். இத்தனை ஆண்டுகளிலும் காங்கிரஸ் கட்சிதான் ஒவ்வொரு முறையும் ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது.
1980-ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லாவை நான் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அப்துல்லா என்னிடம் ‘காங்கிரஸ் கட்சியின் அரசியல் அகராதியில் நட்பு, நன்றி என்ற இரண்டு சொற்களுக்கும் இடமில்லை’ என்று சொன்ன சொற்கள் மறக்க முடியாதவை.
காங்கிரஸ் கட்சிதான் காஷ்மீர் மாநிலத்துக்கு முழு அந்தஸ்து, தனிமாநிலம், தனி அரசியல் நிர்ணயசபை, தனி அரசியல் அமைப்பு, தனிக்கொடி பிரதமர் என்று அனைத்தையும் வழங்கியது. பா.ஜனதா இந்த வாக்குறுதிகளை அளிக்கவில்லை.
அடிக்கடி அரசுகளை கவிழ்த்ததன் மூலம் வாக்குறுதியை உடைத்ததும் காங்கிரஸ்தான். காஷ்மீர் மக்களின் உணர்வுகளுடன் விளையாடியதும் காங்கிரஸ் கட்சிதான்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.