"ராமர் உண்மையிலேயே இருந்தாரா என்பதற்கு ஆதாரம் இல்லை" - காங்கிரஸ் தலைவரின் அடாவடிப் பேச்சு!
"ராமர் உண்மையிலேயே இருந்தாரா என்பதற்கு ஆதாரம் இல்லை" - காங்கிரஸ் தலைவரின் அடாவடிப் பேச்சு!

இந்துக்களுக்கு விரோதமாக நடந்து கொள்வது காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றும் புதிதில்லை என்றாலும் தற்போது அதன் தலைவர்களுள் ஒருவர் தொலைக்காட்சி நேரலை விவாதத்திலேயே பகவான் ராமர் உண்மையிலேயே இந்த பூமியில் அவதரித்தாரா என்பது பற்றி உறுதியாக கூற முடியாது என்று பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஐந்தாம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளை தொடங்கும் விதமாக பூமி பூஜை நடக்க இருப்பதை ஒட்டி Zee News செய்தி சேனல் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் குமார் கெட்கர் பகவான் ராமர் உண்மையிலேயே அவதரித்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை என்றும் அவர் இலக்கியப் படைப்பாக இருக்கலாம் என்றும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.
Zee News நடத்திய இந்த விவாதத்தின் இடையில் நெறியாளர், "பகவான் ராமர் உண்மையிலேயே இருந்தார் என்பதை நீங்களும் காங்கிரஸ் கட்சியும் நம்புகிறீர்களா" என்று கேட்ட போது "ராமாயணம் இருப்பதால் தான் ராமர் என்ற ஒருவர் இருக்கிறார். ராமர் என்ற ஒருவர் வரலாற்றில் இருந்தாரா அல்லது அவர் வெறும் இலக்கிய கதாபாத்திரமா என்ற விஷயத்தில் முடிவு இன்னும் எட்டப்படவில்லை. வால்மீகி ஒரு சிறந்த காவியத்தைப் படைத்தார் அதன் விளைவுகள் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் காணக் கிடைக்கின்றன. ஆனால் வரலாற்று ரீதியாக அவர் உண்மையிலேயே இருந்தாரா என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
இந்த வினோதமான கருத்தைப் பற்றி விளக்கம் கேட்கப்பட்டபோது நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பகவான் ராமரைப் பற்றி ஆதாரமற்ற தகவல்களை கூறியதை மேற்கோள்காட்டி நழுவ முயற்சித்தார். நேபாள பிரதமர் ஷர்மா ஒலி இந்தியா பொய்யான அயோத்தியை உருவாக்கி விட்டதாகவும் உண்மையில் ராமர் நேபாளத்தில் உள்ள பிர்கஞ்ச் கிராமத்தில்தான் மகறந்தார் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதை மேற்கோள் காட்டி "ராமர் இருந்தார் என்பதற்கு வரலாற்று ரீதியான ஆதாரம் இல்லை என்பதால்தான் நேபாள பிரதமர் உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது என்று கூறினார்" என்று தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த முயற்சித்திருக்கிறார்.
இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் சம்பித் பத்ரா இந்துக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தியதை கண்டித்ததோடு இதேபோல் தங்களால் பிற மதக் கடவுள்களை பற்றி பேச முடியுமா என்று கேட்டு பதிலடி தந்தார். "என்ன பேசுகிறார் இந்த காங்கிரஸ்காரர். பகவான் ராமர் வரலாற்றில் இடம் பெற்றவர் இல்லை வெறும் இலக்கிய படைப்பா என்றும் கேட்கிறார். இவர் பகவான் ராமர் உண்மையிலேயே இருந்தார் என்பதற்கு ஆதாரம் காட்ட சொல்கிறார். பிற மத கடவுள்களைப் பற்றி இவ்விதம் பேசியிருந்தால் உங்களது தலை உங்கள் உடலில் இருக்காது. நீங்கள் ஒரு இந்து என்பதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் இந்த மாதிரி விஷயங்களை பேசுவதற்கு உங்களுக்கு தைரியமே இருந்திருக்காது" என்று கூறி மதச்சார்பின்மை மற்றும் பேச்சு சுதந்திரத்தை பற்றி ஒரு பாடமே எடுத்து விட்டார்.
இந்து விரோத போக்கில் நடந்துகொள்வது காங்கிரசுக்கு ஒன்றும் புதிது அல்ல. 2007ஆம் ஆண்டு ராமர்சேது பாலத்தை சேதப்படுத்தி செயல்படுத்தப்பட இருந்த சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைமையிலான அரசால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் "வால்மீகி ராமாயணமும் ராமசரிதமனசும் இந்திய இலக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. ஆனால் இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளையோ கதாபாத்திரங்களையோ வரலாற்றுரீதியாக உண்மை என்று நிரூபிப்பதற்கு இவை ஒன்றும் வரலாற்றுக்குறிப்புகள் அல்ல" என்று தெரிவித்திருந்தது.
மூத்த காங்கிரஸ் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல் ராம ஜன்ம பூமி வழக்கில் சன்னி வக்ஃபு வாரியத்துக்கு ஆதரவாக ராமர் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமர் கோவில் அமைவதை தாமதப்படுத்த 2019 மக்களவைத் தேர்தல் முடியும் வரை தீர்ப்பைத் தள்ளி வைக்கலாமே என்று வேறு வாதாடியதை இங்கு நினைவு கூற வேண்டும். இன்னொரு முக்கிய காங்கிரஸ் தலைவரான சசி தரூர் எந்த நல்ல இந்துவும் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் அமைவதை விரும்ப மாட்டார்கள் என்றும் ராமர் கோவிலை அவரவர் இதயத்தில் கட்டிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
நன்றி : Opindia