Kathir News
Begin typing your search above and press return to search.

ஹிந்து மதமும் திராவிடமும்! - தி.மு.க PTR தியாகராஜன் உரைக்கு எதிர்வினை!

ஹிந்து மதமும் திராவிடமும்! - தி.மு.க PTR தியாகராஜன் உரைக்கு எதிர்வினை!

ஹிந்து மதமும் திராவிடமும்! - தி.மு.க PTR தியாகராஜன் உரைக்கு எதிர்வினை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Sept 2019 10:58 AM IST


மதுரை சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளருமான திரு.தியாகராஜன் அண்மையில் இந்து மதமும் திராவிடமும் என்று நீண்ட ஒரு உரையாற்றினார். தற்போதைய தி.மு.க-வில் ஹிந்து சமயம் சார்ந்து பசக்கூடிய திறனும், வரலாறு கொண்ட ஒரே நபர் இவர்தான். இவரின் கொள்ளுத் தாத்தா காலம் தொட்டே ஆன்மீகப் பணிகளையும் செய்து வந்துள்ளனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. துர்கா ஸ்டாலின் போல தி.மு.க-வின் ஆன்மீக முகமான இவரின் பேச்சிலுள்ள பல செய்திகள் வேறு திராவிடப் பேச்சாளர்களுக்குத் தெரியாது என்பது தான் வருத்தம் தருகிறது. தி.மு.க ஹிந்துக்களின் எதிரியல்ல, ஹிந்து மதத்தை வளர்த்து ஜனநாயகப்படுத்தியுள்ளது என்கிறார், மேலும் அறநிலையத்துறையை அரசு வைத்துக் கொண்டிருப்பதையும் நியாயப்படுத்துகிறார். ஹிந்து சமய அறநிலையத்துறையின் சீர்கேடுகளையும், திராவிடம் ஹிந்து சமயத்திற்குச் செய்த ஈடர் குறித்தும் விளக்க இந்த ஒரு கட்டுரை போதாது, ஆக அதைத் தவிர்த்து இவர் பேச்சில் உள்ள சமகால அரசியலை மட்டும் இங்கே பார்ப்போம்.


அவரின் பேச்சு இதோ:




https://www.youtube.com/watch?v=mJGdZmYCFvM&feature=youtu.be


பெண்களுக்கு ஓட்டுரிமையைக் கொடுத்தது நீதிக் கட்சி என்கிறார். இடுப்பு கிள்ளும் தி.மு.க தொண்டர் இச்செய்தியைப் படித்துத் திருந்துவதற்காகக் கூறினாரா எனத் தெரியவில்லை. ஆனால் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பிரிடிஷ் அரசு இங்கிலாந்தில் பெண்களுக்கான ஓட்டுரிமையைக் கொடுத்துவிட்டு மாண்டேக் செம்ஸ்போர்ட் சீர்திருத்தத்திலும் பரிந்துரைத்ததன் அடிப்படையில் நீதிக்கட்சி செயல்பட்டுள்ளது என்பது வரலாறு. மேலும் அவர்கள் செய்த எல்லாவற்றையும் அதாவது 1938 பெரியார் தலைவராவதற்கு முன் நீதிக் கட்சி செய்த எல்லாவற்றையும் திராவிடக் கணக்கில் எழுதிக் கொள்கிறார். அண்மையில் தேர்தல் செலவு கணக்கைக் கம்யூனிஸ்ட் கணக்காக எழுதியது போல எனலாம்.


புரியாத மொழியிலிருந்து மாற்றி தமிழில் அர்ச்சனை செய்ய வைத்ததால் தி.மு.க ஹிந்து சமயத்திற்கு நன்மை செய்தது என்கிறார். அப்படியெனில் உருதிலிருந்து தமிழில் ஓதவைத்தால் சகோதர மதத்திற்கும் நன்மை கிடைக்குமே? ஆனால் உருது கட்டாயப் பாடமாக்கப்படும் என்றல்லவா வாக்குறுதி அளித்தனர், அளிக்கின்றனர்?


திராவிடக் கட்சியில் கொள்கையால் தான் மற்ற மாநிலக் காங்கிரஸை விட அன்றைய தமிழக காங்கிரஸ் திராவிடக் கொள்கை சார்ந்து செயல்படுகிறது என்கிறார். இதன் மூலம் காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிழதலில் அ.தி.மு.க வெளியிட வைத்ததைத் தங்கள் கணக்கில் கொள்வது போல காங்கிரஸ் செய்தவற்றையும் தங்கள் கணக்கில் எழுத முயல்கிறார். ஆனால் உண்மையில் இதுவரை ஹிந்துக்களுக்கு செய்ததாகப் பேசாத தி.மு.க, ஹிந்துக்களுக்கு எதிரியில்லை என்று பேசாத தி.மு.க இன்று ஹிந்து மதத்திற்குத் திராவிடம் பல நன்மைகளைச் செய்தது என்று சொல்ல வருகிறது என்றால் யாருடைய கொள்கைக்கு ஈடுகொடுக்க மாறியது என்பதை உடன்பிறப்புகள் யோசிக்க வேண்டும்.
தமிழகம் போல கோவில்களை அரசு எடுக்காததால் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் கோட்டைகள் அதிகம் கோவில்கள் குறைவு என்கிறார். அங்கெல்லாம் கோவில்கள் அதிகம் இருந்தன என்று எதன் அடிப்படையில் கூறுகிறார் எனத் தெரியவில்லை, ஆனால் முகலாயப் படையெடுப்பில் சிதைந்த கோவில்களைக் கணக்கில் கொண்டிருக்கலாம். சரி அதே தமிழகத்தில் தான் சிலை திருட்டு மற்ற மாநிலங்களை விட அதிகம் நடந்துள்ளது என்பதைப் பொருத்திப் பார்க்க வேண்டாமா?


1939-இல் தமிழகம் பட்டியல் சமூக மக்களைக் கோவிலுக்குள் செல்லும் உரிமையைப் பெற்றுத் தந்தது, ஆனால் இப்போது ஜனாதிபதியால் வடமாநிலக் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை என்கிறார். இதுவொரு வதந்தி என்று இடதுசாரிகளின் ஆஸ்தான நாளிதழ் வயரே கட்டுரை எழுதியதைப் படிக்கவில்லையா? அல்லது பேக்நியூஸ்பேக்டரி என்று மற்றவர்களை ஏளனம் செய்யும் பகுத்தறிவாதிகள் பகுத்து அறியமாட்டார்கள் என நினைத்தாரா? அது சரி இதைச் செய்ததும் காங்கிரஸ் ஆட்சியில்தான்.


இது குறித்து கதிர் நியூஸ் தளத்திலும் பதிந்திருந்தோம். "ஜனாதிபதி வருகையை திரித்து, பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கு சாதி சாயம் பூசி, நச்சு கருத்துக்களை நயவஞ்சகமாய் பரப்பும் போலி-முற்போக்குகளும் ஊடகங்களும்"


தி.மு.க ஆட்சியில் சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அனுமதி கொடுத்ததன் மூலம் ஹிந்துக்கள் ஐயர் தலைமையின்றி திருமணம் செய்து கொள்ள வழி செய்து கொடுத்தோம் என்கிறார். உண்மையில் சுயமரியாதைத் திருமணம் என்பது தாலி இல்லாமல் செய்து கொள்ளும் திருமணமே அன்றி ஐயர் இல்லாமல் செய்யும் திருமணம் அல்ல. மேலும் அக்காலத்தில் எல்லாக் கல்யாணமும் ஐயர் தலைமையில் தான் நடந்தது என இல்லாததைச் சொல்ல வருகிறார். இன்னொரு செய்தியையும் இங்கே குறிப்பிட வேண்டும், 1968 ஜனவரி 20-இல் இச்சட்டம் அமலுக்கு வருகிறது, 1968 பிப்ரவரி 10-இல் கலைஞர் முதல்வராகிறார், 1969 பிப்ரவரியில் கனிமொழி பிறக்கிறார். அப்படியெனில் இராசாத்தி அம்மாளுடன் முதல் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதைப் பொது வெளியில் அறிவித்திருக்கலாமே ஏன் மறைக்க வேண்டும் என்று அன்றைக்கே பலர் விவாதித்தனர்.


கோவில் பராமரிப்பிற்கும், திருப்பணிக்கும் தேர் சீரமைப்பிற்கும் அதிகமாக நிதி ஒதுக்கியது தி.மு.க என்கிறார். அதனால் தான் தளபதி ஸ்டாலினை ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லையா என்றும், திருப்பதி உண்டியலுக்குப் பாதுகாப்பு எதற்கு என்று அக்கா கணிமொழி கேட்கிறாரா என்றும் சொல்லியிருக்கலாம். கோவில் பணத்தை அரசு எடுக்கவில்லை அரசு தான் மக்கள் பணத்தை எடுத்து இருநூறு கோடி ஆண்டுதோறும் கலைக்காக, பண்பாட்டிற்காகக் கொடுக்கிறது என்கிறார். கோவில் பணத்தில் தானே ராமாயணத்தை எரிக்க வேண்டும் எனப் பேசி வந்த பேரறிஞர் அண்ணா நினைவு நாள் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து ஆண்டுதோறும் நடக்கிறது? ஹிந்து அறநிலையத்துறை அரசாணை எண்.25 (2008)ன் படி தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களை விற்கவோ, நீண்ட கால குத்தகைக்கு விடவோ இருந்த தடையை நீக்கிய அரசு தி.மு.க என்பதையும் மறக்கலாமா?


தனிநபரிடம் கொடுத்த கோவிலில் அரசியல் தலையீடு இல்லாமல் உள்ளதா? முன்னுதாரணம் உண்டா? என்கிறார். எத்தனைத் தனியார் பாத்தியத்திற்குட்பட்ட கோவில்கள் உள்ளன என்று கணக்கெடுத்துப் பார்க்கலாம். மதச்சார்பற்ற நாட்டில் இப்படி அரசுக் கட்டுப்பாட்டில் சமய தளங்களை எடுத்துக் கொண்டு முன்னுதாரணம் உண்டா எனத் தெரியவில்லை.


ஹிந்து மதத்தை ஜனநாயக முறைக்குக் கொண்டு வந்தது திராவிட இயக்கம் என்கிறார். அப்படியெனில் மற்ற மாநிலங்களிலும் நாட்டிலும் திராவிட இயக்கத்தைப் பார்த்துத் திருந்தினார்கள் என்றே கொள்ளவோம். முத்தலாக் முறையை மதச்சுதந்திரம் என்று பேசும் தி.மு.க-வினர் திருந்தி ஜனநாயகப்படுத்தினால் மகிழ்ச்சி.மக்களைக் கோவில்களுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது திராவிட இயக்கம். இறைவனை இடைத்தரகரின்றி மக்களிடம் கொண்டு சேர்த்தது திராவிட இயக்கம் என்பதும் மகிழ்ச்சியே. அப்படியே ‘ஹிந்து ஆன்றோர் சான்றோர் அடங்கிய தனித்து இயங்கும் அமைப்பிடம் கோவில்களை ஒப்படைக்க வேண்டும்’ என்று 1985-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கமிட்டி பரிந்துரைத்ததையும் செய்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.


இறுதியாக, ஹிந்து மதம் வேறு, ஹிந்துத்துவம் வேறு என்று ஒப்பிட்டு, தமிழக ஹிந்து மதம் அனைவரையும் அரவணைக்கும், ஆன்மீகச் சுதந்திரம் உண்டு, அமைதியான மார்க்கம் என்று புகழ்ந்துள்ளார். பிள்ளையார் சிலைகளை உடைத்த பொழுதும், இராமர் உருவங்களை செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்திய போதும் பெரிய போராட்டமில்லை என்பதால் அமைதியான பண்பாடு தான். தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லை என்று மதிமாறன் முதல் திருமுருகன் காந்தி வரை கூறிக் கொண்டிருக்கும் வேளையில் தியாகராஜன் இதை மறுத்ததற்குப் பாராட்டுக்கள்.


நீங்கள் செய்யும் மூடநம்பிக்கையைத் தான் எதிர்க்கிறேன் அன்றி ஆன்மீகத்தை எதிர்க்கவில்லை என்று பெரியாரே சொன்னதாகச் சொல்கிறார். யுனஸ்கோ விருது போல இது உண்மையா எனத் தெரியாது ஆனால் 'கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி' என்று பெரியார் சொன்னதாக ஸ்ரீரங்கத்தில் சிலை இருப்பது உண்மை. இப்படிக் கோவில்களில் மட்டுமல்ல அறநிலையத் துறைக்குள்ளேயே எதிர்க் கருத்து கொண்டவர்களுக்கு இடம் கொடுத்ததே தி.மு.க செய்த முதல் தவறு. மீதி தவறுகளை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். அன்பின் தியாகராஜன் அவர்கள் இதற்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் அனுப்பலாம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News