Kathir News
Begin typing your search above and press return to search.

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வருவாய் முறைகேடு! விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர், தூத்துக்குடி பகுதிகளில் பிரசித்தி பெற்ற இந்த முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் எனவும் பக்தர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வருவாய் முறைகேடு! விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!
X

Shiva VBy : Shiva V

  |  25 Feb 2021 1:35 PM IST

விருதுநகரில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்கவும் பக்தர்களுக்கு என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறை ஆணையருக்கு மதுரை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாரி அர்ச்சுனா, வைப்பாறு ஆகிய இரு கங்கைக்கு நிகரான தீர்த்தங்களின் கரையில் இந்த மாரியம்மன் கோவில் அமைந்திருப்பதால் இருகங்கைங்குடி மாரியம்மன் என்று அழைக்கப்பட்டதாகவும் பின்னாளில் இது இருக்கன்குடி மாரியம்மன் கோவில் என்று மருவியதாகவும் சொல்லப்படுகிறது. விருதுநகர், தூத்துக்குடி பகுதிகளில் பிரசித்தி பெற்ற இந்த முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் எனவும் பக்தர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த அந்த மனுவில் மிகவும் பழமை வாய்ந்த இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஆடித் திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்றும் இருந்தும் அங்கு வரும் பக்தர்களுக்கு போதுமான வசதிகள் எதுவும் செய்து தருவதில்லை என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் சட்டத்திற்குப் புறம்பாக பல விதிமீறல்கள் எங்கு நடைபெறுகின்றன என்றும் கூறியுள்ளார்.

கோவிலில் சுகாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும், பாதுகாப்பு அறை கடந்த நான்கு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதாகவும், அங்குள்ள வணிக வளாகம் மிகவும் சேதமடைந்து காணப்படுவதாகவும் கோவிலில் உள்ள மின்சாரம் அருகிலிருக்கும் காவல்துறையின் அவுட் போஸ்டுக்கு பயன்படுத்துவதாகவும் இதனால் கோவிலின் வருவாய் பெரிதளவு பாதிக்கப்படுவதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முடி காணிக்கை திருட்டு வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கோவில் நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு உரிய வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் மற்றும் கோவில் சொத்துக்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எஸ்.ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு இது தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை மார்ச் மாதம் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News