அகற்றப்படாத செஸ் தம்பி பொம்மைகளால் விபத்துக்கள் - அலட்சியத்தில் தமிழக அரசு
சென்னையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள செஸ் தம்பி பொம்மைகள் மற்றும் விளம்பர போர்டுகளால் விபத்து நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது .
By : Karthiga
சென்னையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள 'செஸ் தம்பி' பொம்மைகள் மற்றும் விளம்பர போர்டுகளால் விபத்து நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் இந்த மாதம் 9ஆம் தேதி வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்தன. இதை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு வகைகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. அதில் முக்கியமாக சென்னையின் பொது இடங்களில் சிறியதும் பெரியதுமாக குதிரைமுகம் மனித உருவத்துடன் கூடிய தம்பி எனும் 'மாஸ்காட்' பொம்மைகள் மற்றும் ராட்சத சதுரங்க காய்கள் வைக்கப்பட்டன.
மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பிற முக்கிய நகரங்களிலும் 'ஹோடிங்ஸ்'எனப்படும் இராட்சத விளம்பர பலகைகள் சாலையோரங்களில் நிறுவப்பட்டன.
பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் சாலையில் உள்ள மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் தொங்கவிடப்பட்டன. இதனால் செஸ் ஒலிம்பியாட் செய்தி மக்களிடம் பிரபலமானது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முடிந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகியுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வைக்கப்பட்டுள்ள தம்பி பொம்மைகளும் விளம்பர பலகைகளும் அகற்றப்படவில்லை. தற்போது தமிழகத்தில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் காற்றும் மழையும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள பதாகைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தம்பி, சதுரங்க காய் பொம்மைகள் பெயர்ந்து,சாலைகளில் செல்வோர் மீது விழுந்து விபத்துகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
அசம்பாவிதங்கள் எதுவும் நிகழும் முன் போலீஸ், மாநகராட்சி விளையாட்டு மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், விளம்பர பொம்மைகளையும் பதாகைகளையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.