Kathir News
Begin typing your search above and press return to search.

அங்கீகாரம் பெறாத 30 ஆயிரம் மனைகள் பத்திரபதிவு - 100 சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் முப்பதாயிரம் அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக 100 சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெறாத 30 ஆயிரம் மனைகள் பத்திரபதிவு - 100 சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கை

KarthigaBy : Karthiga

  |  11 Oct 2022 8:30 AM GMT

தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த சரவணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நிலத்தை அங்கீகாரம் பெறாமல் வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்தனர்.ஆனால் தற்போது வரை அந்த நிலம் புன்செய் என்றுதான் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து ஏராளமான வீட்டு மனைகளை விதிகளை பின்பற்றாமல் விற்பனை செய்துள்ளனர்.பத்திர பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.


கடந்த விசாரணையின் போது இந்த விவகாரத்தில் தொடர்புடைய சார்பதிவாளர் மனையடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு சட்டத்திருத்தம் கொண்டு வந்ததிலிருந்து தற்போது வரை அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்தது குறித்து பதிவுத்துறை தலைவர் இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 30,000 அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்ட சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்று வாதாடினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை வருகிற 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News