Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை மாநகராட்சியை 3 ஆக பிரிக்கக் கோரும் பல தரப்பினரின் கோரிக்கை! இப்போது கிடையாது என அதிமுக கை விரிப்பு!

சென்னை மாநகராட்சியை 3 ஆக பிரிக்கக் கோரும் பல தரப்பினரின் கோரிக்கை! இப்போது கிடையாது என அதிமுக கை விரிப்பு!

சென்னை மாநகராட்சியை 3 ஆக பிரிக்கக் கோரும் பல தரப்பினரின் கோரிக்கை! இப்போது கிடையாது என அதிமுக கை விரிப்பு!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2019 7:42 AM GMT



நிர்வாக வசதிகளுக்காக ஒரு மாவட்டம் பல மாவட்டங்களாக பிரிக்கப்படுவது போல கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் தொகையைக் கொண்ட சென்னை மாநகராட்சியையும் 3 ஆக பிரிக்கப்பட் வேண்டும் என்ற கோரிக்கை சென்னை வாசிகளிடையே வலுத்து வருவதாக சில காலமாக பேசப்பட்டு வந்தது, சில கட்சிகளும், பத்திரிக்கைகளும் வலியுறுத்தி வருகின்றன. அதற்கான காரணங்களையும் கீழ் கண்டவாறு முன் வைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவ்வாறு பிரிக்கப்படும் திட்டம் இப்போது இல்லை என்றும், எதிர்காலத்தில் வேண்டுமென்றால் நடைபெறலாம் என அதிமுக கூறியுள்ளது.


தற்போது 174 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் 16 சட்டப்பேரவை தொகுதிகள், 10 மண்டலங்கள் மற்றும் 155 வார்டுகளுடன் செயல்பட்டு வந்த சென்னை மாநகராட்சி, கடந்த 2011-ஆம் ஆண்டு மேலும் விரிவுபடுத்தப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த சென்னையை ஒட்டியுள்ள 42 உள்ளாட்சி அமைப்புகள் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இப்போது 426 ச. கி.மீ. பரப்பளவுடன் 22 சட்டப்பேரவைத் தொகுதிகள், 15 மண்டலங்கள், 200 வார்டுகள் எனப் பெருநகர சென்னை மாநகராட்சி பரந்து விரிந்து காணப்படுகிறது.


கடந்த மக்களவைத் தேர்தலின்போது, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 22 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை 62,53,669. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். நாளொன்றுக்கு சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து போகிறார்கள். விரைவிலேயே சென்னையின் மக்கள் தொகை ஒரு கோடியை எட்டுமென்று கணிக்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளான சுகாதாரம், கல்வி, சாலைகள் பராமரிப்பு, கழிவுப் பொருள்கள் மேலாண்மை என்று 14 துறைகள் மாநகராட்சியில் செயல்பட்டு வருகின்றன. 2019-20-ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு (பட்ஜெட்) ரூ.3,547 கோடி.
நாளொன்றுக்கு 5,400 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் சேர்கின்றன. கட்டுமானக் கழிவுகள் 700 டன்னுக்கும் அதிகமாகக் காணப்படுகிறது.


இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியை முறையாக நிர்வகிக்க வேண்டுமானால் அது மூன்றாகப் பிரிக்கப்பட்டாக வேண்டும். சுமார் 80 லட்சம் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாநகராட்சியின் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். 200 வார்டுகளைக் கொண்ட பெரும்பகுதியை ஒரு மேயர், ஓர் ஆணையர் தலைமையில் நிர்வகிப்பது சாத்தியமில்லை என்பதை பெருநகர சென்னை மாநகராட்சியின் சாலைகளும், எல்லாத் தெருக்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளும் எடுத்தியம்புகின்றன.


நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. அப்படியிருக்கும்போது, சென்னை மாநகராட்சியை மட்டும் பெருநகர மாநகராட்சியாக வைத்திருப்பது என்ன நியாயம்? தில்லி மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்பட்டிருப்பதுபோல பெருநகர சென்னை மாநகராட்சியும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி மேயர், ஆணையரின் கீழ் செயல்பட்டால் மட்டும்தான், சாக்கடை ஓடாத தெருக்கள், குண்டும் குழியுமில்லாத சாலைகளுடன் முறையான கழிவு மேலாண்மை உறுதிப்படுத்தப்பட்டு சென்னைவாழ் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்கிற வாதங்களுடன் தினமணி பத்திரிக்கையின் தலையங்கத்திலும் சென்னை குடிமகன்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.


கராத்தே தியாகராஜன் கருத்து


சென்னை மாநகராட்சியின் எல்லை மிகப் பெரியது. தமிழகத்தில் ஒன்னரை சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மேயர் இருக்கும் மாநகராட்சியெல்லாம் இருக்கிறது. திருப்பூர் மாநகராட்சியில் ஒன்னரை தொகுதிதான் இருக்கிறது. ஆனால், சென்னையிலுள்ள 22 சட்டமன்ற தொகுதிக்கு ஒரே ஒரு மேயர் தான். மேலும், 200 வார்டுகள் மாநகராட்சியில் அடங்கியுள்ளது. மற்ற மாநகராட்சியிலுள்ள வார்டுகளில் மக்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 10,000 பேர் தான். ஆனால், சென்னையில் ஒரு வார்டில் 35 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் உடனுக்குடன் கிடைப்பதில்லை. நிர்வகிப்பதிலும் அதிகாரிகள் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.


மிகப்பெரியதாக இருந்த டெல்லி மாநகராட்சி 3 ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நிர்வாக வசதிகளுக்காக மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல, நீண்ட நெடிய எல்லைகளைக் கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சியை 3 மாநகராட்சியாக பிரிக்க வேண்டும். அதாவது, தென்சென்னை மாநகராட்சி, வட சென்னை மாநகராட்சி, மத்திய சென்னை மாநகராட்சி என 3 மாநகராட்சியாக பிரிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன்.


வி.சி.க கருத்து
இதே கோரிக்கையை தாங்கள் பல ஆண்டுகளாக திமுக, அதிமுக அரசுகளிடம் வலியுறுத்தி வந்ததாகவும், மீண்டும் அந்த கோரிக்கையை வலியுறுத்துவதாகவும், மேலும் சென்னை மாநகராட்சியில் அதிக அளவில் தலித்துக்கள் வசித்து வருவதால் இதை தலித்துகளுக்கான தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும். மேலும் தலித் ஒருவர் சென்னை மேயராக வரும் பட்சத்தில்தான் சென்னையை விட்டு வெளியேற்றப்படும் சென்னையின் பூர்வீக ஏழை மக்கள் மற்றும் குடிசைவாசிகளின் பிரச்சினை தீர்க்கப்படும் எனவும் வி.சி.கவும் கருத்து தெரிவித்துள்ளது.


இப்போது இல்லை: அதிமுக திட்டவட்டம்


இந்த நிலையில் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அதிமுக அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளருமான செம்மலை கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தலில் சமூக விகிதாச்சாரப்படி 1-2 தொகுதிகள் சுழற்சி முறையில் தனித்தொகுதிகளாக ஒதுக்கப்பட்டிருக்கும். இம்முறை இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தொகுதி மறுவரையறையும் முடிந்துவிட்டது. மாநிலத் தேர்தல் ஆணையத்தால் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தேர்தலுக்கு சென்னை மாநகராட்சி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் அந்த வாய்ப்பு வரலாம். உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் குழப்பமும் இல்லை. திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த முறையும் ஏதேனும் ஒன்றை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க முயற்சிகள் மேற்கொண்டாலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும்” என்றார்.


news sources: hindu, dinamani, nakkeeran


Next Story
கதிர் தொகுப்பு
Trending News