பூசாரிகள் இல்லாமல் பக்தர்கள் திண்டாட்டம் - நடவடிக்கை எடுக்குமா அரசு.?
பூசாரிகள் இல்லாமல் பக்தர்கள் திண்டாட்டம் - நடவடிக்கை எடுக்குமா அரசு.?
By : Shiva V
மேட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலில் பூசாரிகள் இல்லாததால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் தனிநபர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதனாலேயே பூசாரிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் பிரசித்திபெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு மேட்டுப்பாளையம் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் தினசரி வந்து அம்மனை தரிசித்து செல்வர். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும் வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம்.
இந்த கோவிலில் அம்மன் சன்னதி, சிவன் சன்னதி, பகாசூரன், நாகர், பவானி ஆற்றின் கரையோரத்தில் முத்தமிழ் விநாயகர் ஆகிய சன்னதிகள் உள்ளன. இதுதவிர கொடிமரம் மற்றும் வாகனங்களுக்கு முன்பாக பூஜைகளும் நடைபெறும். இந்த சன்னதிக்கு மொத்தம் 13 பூசாரிகள் தேவைப்படுவர். இந்தக் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் கோவில் பூசாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்களை நியமிக்கும் அதிகாரம் பரம்பரை அறங்காவலரிடம் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்த கோவிலில் தற்போது பூசாரிகள் ஓய்வு பெற்றதாலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாலும் பூசாரிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 13 பூசாரிகள் இருக்க வேண்டிய கோவிலில் தற்போது 3 பூசாரிகள் மட்டுமே உள்ளனர். இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே இந்த விவகாரத்தை அரசு கவனத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெற்று பாடசாலையில் படித்து சான்று பெற்றவர்களை பூசாரிகளாக தேர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.