திருப்பூர் காய்கறி சந்தையில் வைரஸ் பரவலை தடுக்க கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைப்பு.. நிர்மலா சீத்தாராமன் பாராட்டு..
திருப்பூர் காய்கறி சந்தையில் வைரஸ் பரவலை தடுக்க கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைப்பு.. நிர்மலா சீத்தாராமன் பாராட்டு..

கொரோனா பரவுவதைத் தடுக்க ஒவ்வொருவரும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும், பொது இடங்களிலும் இதை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதனால் காய்கறி வாங்கச் சென்றால், மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றால், ஆறு அடி அல்லது ஒரு மீட்டர் இடைவெளியில் பொது மக்கள் நின்று வாங்கி வருகின்றனர்.
கூட்ட நெரிசலில் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு பொருட்கள் வாங்குவதைத் தடுக்கவும், கொரோனா பரவுவதை தடுக்கவும் சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் திருப்பூரில் உள்ள நெருக்கடியான காய்கறி மார்க்கெட்டை பெரிய மைதானங்களுக்கு கொண்டு சென்றுள்ளது மாவட்ட நிர்வாகம்.
இந்த நிலையில் திருப்பூர் தென்னம்பாளையத்தில் ஒரு காய்கறி சந்தையில் எப்போதும் இல்லாத முயற்சியாக ஒரு கிருமிநாசினி தெளிப்பு பாதையை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திக்கேயன் ஏற்பாட்டில் அமைத்துள்ளனர்.
இதன்படி அங்கு தினசரி காய்கறி சந்தையில் 7 அடி உயரம், 5 அடி அகலம், 16 அடி நீளத்திற்கு கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன்வழியாக ஒருவர் கைகளில் மேலேதூக்கியவாறு 3 வினாடிகள் நடந்தாலே அவரது உடல் முழுவதும் இருந்த கொரோனா வைரஸ் தொற்று நீங்கிவிடும்.
இந்த காய்கறி சந்தைக்கு செல்லும் அனைவரும் கிருமிநாசினி சசுரங்கப் பாதை வழியே தான் அனுமதிக்கப்படுகின்றனர். சுரங்கப்பாதையில் நுழைவதற்கு முன்பாக பல இடங்களில் கை கழுவுவதற்கு சோப்புடன் இடங்கள் உள்ளன. சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கிருமி நாசினி சுரங்கபாதை, திருப்பூர் மாநகராட்சி முழுவதும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் செய்யப்பட்டுள்ள இந்த முன்மாதிரி பணி குறித்து தெரிய வந்த மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்த முயற்சி குறித்து பாராட்டி மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திக்கேயன் ட்வீட்டுக்கு ரீடுவீட்டும் செய்துள்ளார்.