நான்கு முக சிவலிங்கம் எந்த ஊரில் உள்ளது தெரியுமா?
மத்திய பிரதேச மாநிலத்தில் நான்கு முக சிவலிங்கம் அமைந்துள்ளது.அதன் சிறப்புகள் பற்றி காண்போம்.
By : Karthiga
மத்திய பிரதேசம் மாநிலத்தில் நச்னா என்ற இடத்தில் அமைந்துள்ளது, சவுமுக்நாக்நாத் மந்திர்,இந்த ஆலயம் ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இந்த ஆலயத்திற்குள் சிவலிங்கத்தின் நான்கு பக்கத்திலும் பக்கத்திற்கு ஒன்றாக சிவபெருமானின் முகமும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. விஷ் கிரஹ ஹன் ரூப், பரினய் ஷாந்த் ரூப்,அர்த்தனேஷ்வரர் ரூப்,க்ரூம் ரூப் என்று இந்த நான்கு முகங்களையும் வட மாநில பக்தர்கள் அழைக்கின்றனர்.
சிவனைப் பற்றி கூறும் புராணங்கள் அவருக்கு ஐந்து முகங்கள் உண்டு என்று சொல்கின்றன. கிழக்கு திசை நோக்கிய முகம் தத்புருஷம்,மேற்குதிசை நோக்கிய முகம் சத்யோஜாதம், தெற்கு நோக்கி முகம் அகோரம், வடக்கு திசை நோக்கிய முகம் வாமதேவம் ,மேல்நோக்கிய முகம் ஈசானம் என்று அழைக்கப்படுகிறது. மேற்கண்ட சவுமுக்நாத் ஆலயத்திலும் இந்த முறைப்படியே சிவலிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவனின் முகங்கள் வடிக்கப்பட்டிருப்பதாகவும் மேல் நோக்கிய ஈசானிய முகத்திற்கு பதிலாக பானத்தின் மேற்பகுதியே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.