தமிழகம் ரிசர்ச் பவுண்டேஷன் மற்றும் சென்னை சிட்டிசன்ஸ் போரம் சார்பில் Dr. தமிழிசைக்கு பாராட்டு விழா!!
தமிழகம் ரிசர்ச் பவுண்டேஷன் மற்றும் சென்னை சிட்டிசன்ஸ் போரம் சார்பில் Dr. தமிழிசைக்கு பாராட்டு விழா!!
By : Kathir Webdesk
தமிழகம் ரிசர்ச் பவுண்டேஷன் மற்றும் சென்னை சிட்டிசன்ஸ் போரம் சார்பில், தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாராட்டு விழா, சென்னை திநகரில் உள்ள ரெசிடென்சி டவர் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது.
விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு, தமிழகம் ரிசர்ச் பவுண்டேஷன் மற்றும் சென்னை சிட்டிசன்ஸ் போரம் சார்பில் நினைவு பரிவு வழங்கப்பட்டது.
நினைவு பரிசை, தமிழகம் ரிசர்ச் பவுண்டேஷன் இயக்குனர்கள் எஸ்.ஜி. சூர்யா, ரமேஷ் சிவா, ஆதித்தியா ரெட்டி, சென்னை சிட்டிசன்ஸ் போரம் சார்பில் அதன் தலைவர் டாக்டர் எம்.ராம்குமார், கே.வி.வி.கிரி, பா.ஜ.க. மாநில பொது செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர் வழங்கினார்கள்.
விழாவில், ஒலிம்பியா குழுமத்தின் தலைவர் அஜித் ஜோடியா, மீனவர்கள் நல சங்கத்தின் தலைவர் அன்பழகனார், எம்.ஓ.பி. வைஷ்ணவ பெண்கள் கல்லூரியின் முதல்வர் டாக்டர் லலிதா பாலகிருஷ்ணன், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் நிறுவன தலைவர் டி.வி.கணேஷ், தெலங்கானா மாநில வர்த்தக சபையின் துணைத்தலைவர் ரமாகாந்த் இனானி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமன், தென்னிந்திய வர்த்தக சபை தலைவர் கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:-
என்னை ‘மேதகு’ என்று அழைக்க தொடங்குகிறார்கள். ‘மேதகு’ என்பதை விட ‘பாசமிகு சகோதரி’ என்று அழைப்பதையே நான் விரும்புகிறேன்.
நான் ஒவ்வொரு வினாடியையும் மகிழ்ச்சியாகவே கடந்து வருகிறேன். என்னை கஷ்டப்படுத்த நினைக்கும் ‘மீம்ஸ் கிரியேட்டர்கள்’ தான் தினமும் தோற்று வருகிறார்கள். எனது கடமை பணி செய்வதே. எனவேதான் எந்த விமர்சனங்களும் என்னை ஒருபோதும் தாக்கியதில்லை, நானும் சோர்ந்து போனதில்லை.
அரசியல் என்பது, சாதாரண விஷயமல்ல. என் அப்பா (குமரி அனந்தன்) என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். அப்படிப்பட்ட அப்பாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து பொதுப்பணியில் ஈடுபடுவது சாதாரண விஷயமல்ல. அது மிகப்பெரிய சவால். ரணப்பட்டு போயிருக்கிறேன்.
அவர் காங்கிரஸ்காரர், நான் பா.ஜ.க. தொண்டர். அவரது பிறந்தநாள் விழாவில்கூட என்னால் சேரமுடியாது. ஆனால் அந்த ரணப்பட்ட வாழ்க்கைக்கு எனது உயர்வு மருந்தாக மாறியிருக்கிறது. இது மகிழ்ச்சி.
“கண்டதை படித்தால் பண்டிதர் ஆகலாம்” என்று என் தந்தை சொல்வார். ஆனால் “கண்டதை படித்தால் கவர்னர் கூட ஆகலாம்” என்று எனக்கு இப்போது தெரிந்துள்ளது.
என் வாழ்க்கையில் ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்தது, புத்தகம். மனது பாரமாக இருக்கும் போது புத்தகம் படிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.