மும்பையை புரட்டி போட்ட புழுதிப் புயல் : சரிந்து விழுந்த 100 அடி உயர விளம்பரப் பலகை-9 பேர் பலி 70 பேர் படுகாயம்!
மும்பையை நேற்று கடுமையான மழையுடன் கூடிய புழுதிப் புயல் தாக்கியது. இதில் 100 அடி உயர விளம்பரப் பலகை சரிந்து விழுந்தது.
By : Karthiga
மும்பையில் நேற்று கடுமையான புழுதி புயல் வீசியது .இதில் 100 அடி உயர விளம்பரப் பலகை சரிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த புழுதிப் புயலுடன் சேர்ந்து மழையும் பெய்தது. இதனால் மும்பையில் விமானம் , புறநகர் மின்சாரம், மெட்ரோ ரயில் போக்குவரத்து ஆகியவை ஒரு மணி நேரத்திற்கு மேல் ஸ்தம்பித்தன. 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
மும்பை நோக்கி வந்த ரயில்கள் வழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. மும்பையில் கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில் திங்கட்கிழமை மாலை திடீரென புழுதி புயல் சுழன்று வீசியது. அத்துடன் மழையும் பெய்தது. பல அடி உயரத்துக்கு புழுதி காற்று வீசியதால் சாலைகளில் எதிரே வருபவர்கள் கூட தெரியாத நிலை உருவானது .இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். நடந்து சென்ற பலர் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடி தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் கர்கோபா பகுதியில் நூறடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த விளம்பர பல வகை சரிந்து அருகில் இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தின் மீது விழுந்தது.
அதன் அடியில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். விளம்பர பலகை இரும்பு கம்பிகளை வைத்து கட்டப்பட்டிருந்ததால் விழுந்த வேகத்தில் கீழே இருந்தவர்களை நசுக்கியது .இதனால் அந்த இடத்தில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. என்ன நிகழ்ந்தது என்பதை அறியவே சில நிமிஷங்கள் ஆயின .தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் .இதில் ஒன்பது பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார்.
SOURCE :Dinaseithi