இந்தியாவை உச்சத்துக்கு கொண்டு சென்ற தமிழச்சி இளவேனில் வாலறிவன் - உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் படைக்கப்பட்ட சரித்திரம்!
இந்தியாவை உச்சத்துக்கு கொண்டு சென்ற தமிழச்சி இளவேனில் வாலறிவன் - உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் படைக்கப்பட்ட சரித்திரம்!
By : Kathir Webdesk
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் கலந்துக் கொண்டார்.
இந்த ரியோ டி ஜெனிரோ உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த அபுர்வி சண்டேலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகியோர் மட்டுமே தங்கம் வென்றுள்ளனர்.இவர்களுக்கு அடுத்தபடியாக கடந்த புதன்கிழமை நடந்த ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை போட்டியில் 251.7 புள்ளிகளுடன் சாதனை படைத்து, இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளார்.
இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். தற்போது சீனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற 3வது இந்தியர் என்ற பெருமையையும் இளவேனில் பெற்றுள்ளார்.
உலகக் கோப்பையில் சீனியர் பிரிவில் அவருக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும். இதற்கு முன்பு ஜெர்மனியில் உள்ள முனிச்சில் நடந்த போட்டியில் அவர் 4-வது இடத்தை பிடித்தார். இளம் வீராங்கனையான இளவேனி கடலூரில் பிறந்தவர். தற்போது அவர் குஜராத் மாநிலத்தில் வசித்து வருகிறார்.
இவருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில், ‘பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று நம் தேசத்திற்கு பெருமை சேர்த்த கடலூரை சேர்ந்த தமிழக வீராங்கனை சகோதரி இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்…பாராட்டுக்களும்…’ என பதிவிட்டுள்ளார்.