பழங்குடி மற்றும் கிராம மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கிய ஈஷா!
ஈஷா சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் 47 மாணவ மாணவிகளுக்கு அதற்கான காசோலை வழங்கப்பட்டது.
By : Mohan Raj
ஈஷா சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் 47 மாணவ மாணவிகளுக்கு அதற்கான காசோலை வழங்கப்பட்டது.
ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடி கிராமங்களான தாணிக்கண்டி, சீங்கப்பதி நல்லூர்ப்பதி, முள்ளாங்காடு மற்றும் பிற கிராமங்களான மத்வராயபுரம், செம்மேடு, ஆலாந்துறை மற்றும் நரசீபுரம் கிராமங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், தங்களது மேற்படிப்பைத் தொடர பொருளாதாரம் ஒரு தடையாகிவிடக்கூடாது என்பதற்காக, கடந்த சில ஆண்டுகளாக ஈஷா அத்தகைய பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
கோவை PSG பள்ளி, அவினாசிலிங்கம் கல்லூரி, கற்பகம் கல்லூரி, கொங்குநாடு கல்லூரி, கலைமகள் கல்லூரி, பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்லூரி, SNMV கல்லூரி, கரூர் சாரதா நிகேதன் உள்ளிட்ட பல கல்லூரிகளில் கல்வி பயில மாணவர்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பாக இருக்கிறது.
கடந்த 6 வருடங்களுக்கு மேலாக இத்தகைய கல்விப் பணியினை ஈஷா செய்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (06-11-2022) அன்று பிற்பகல் 1 மணிக்கு இதற்கான காசோலை வழங்கும் விழா ஈஷா யோக மையத்தில் நடைபெற்றது. இதில் 47 மாணவ மாணவியர் தங்களது பெற்றோருடன் கலந்துகொண்டு தங்களுக்கான காசோலைகளை பெற்றுக்கொண்டனர்.
பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக ஊக்கத்தொகை பெற்றவர்களில், பெரும்பான்மையானவர்கள் மாணவியர் என்பதும் அதில் பெரும்பாலானோர் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஈஷா உதவித்தொகை பெற்று கல்வியை முடித்த முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.
மேலும் அரசு தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துதல், பழங்குடி மற்றும் கிராம அரசுப்பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் உள்ளிட்ட கல்வி சார்ந்த பல பணிகளை ஈஷா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.