'கிரீன் கார்டு' கோரும் இந்தியர்களுக்கு எதிர்பார்த்த பலன் : அமெரிக்க விசா நடைமுறையில் மாற்றம்!
அமெரிக்க விசா விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரீன் கார்டு எதிர்பார்க்கும் இந்தியர்களுக்கு இந்த மாற்றம் பெருமளவில் பலன் கொடுக்கும்.
By : Karthiga
அமெரிக்க, 'விசா' நடைமுறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது, 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தர குடியுரிமை கேட்டு காத்திருக்கும் இந்தியர் களுக்கு பெரிய அளவில் பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு வகை விசாக்கள் அளிக்கப்படுகின்றன. கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை கேட்டு விண்ணப்பித்து காத்திருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்தாண்டு நிலவரப்படி, 18 லட்சம் பேர், கிரீன் கார்டு கேட்டு காத்திருக்கின்றனர்.
இதில், 63 சதவீதம் பேர், அதாவது, 11 லட்சம் பேர் இந்தியர்கள், அதற்கடுத்து, 14 சதவீதத்துடன் சீனா உள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்த, 2.50 லட்சம் பேர் கிரீன் கார்டுக்காக காத்துள்ளனர். இந்த, 11 லட்சம் இந்தியர்களில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு, தங்கள் வாழ்நாளைக்குள் கிரீன் கார்டு கிடைக்காது என, சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை துறை சமீபத்தில் புதிய மாற்றத்தை செய்துள்ளது.இதன்படி, குறிப்பிட்ட சில பிரிவினருக்கான, இ.ஏ.டி., எனப்படும் வேலை உறுதிசெய்யும் ஆவணம் மற்றும் புதுப்பிக்கப்படும் ஆவணம், ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
தற்போது, எச்1பி விசா பெற்றுள்ளோர், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் மட்டுமே பணியாற்ற முடியும். அதே நேரத்தில் வேலை உறுதி செய்யும் ஆவணத்தை பெற்றால், எந்த நிறுவனத்திலும் பணியாற்றலாம்.இந்த ஆவணம் செல்லுபடியாகும் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், புதுப்பிப்பதற்காக தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களின் அளவு கணிசமாக குறையும். இதன் வாயிலாக, கிரீன் கார்டு உள்ளிட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.
இதைத் தவிர, வேலை உறுதி மொழி சான்றிதழ் இல்லாததால், வெளியேற்றப்படுவது போன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முடியும். இந்த ஆவணம் இருந்தால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் மனைவி அல்லது கணவர், குழந்தைகள் அங்கு பணியாற்ற முடியும்.
SOURCE :Dinamalar.com