இலவச உணவு தானிய திட்டம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிப்பு- மத்திய மந்திரி சபை முடிவு!
பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் 80 கோடி ஏழைகளுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் பணியை நீட்டிக்க மதிய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
By : Karthiga
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவிய போது மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக பிரதம மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் கீழ் ரேஷன் கடைகளில் நாடு முழுவதும் உள்ள சுமார் 80 கோடி ஏழைகளுக்கு மாதந்தோறும் தலா ஐந்து கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஏற்கனவே மானிய விலையில் வழங்கப்பட்ட ஐந்து கிலோ உணவு தானியத்துடன் கூடுதலாக இந்த இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.
இத்திட்டம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. அடுத்த மாதம் 31-ஆம் தேதியுடன் இத்திட்டம் முடிவடைய இருந்தது . இருப்பினும் மேலும் ஐந்தாண்டுகளுக்கு இலவச உணவு தானியம் வழங்குவது நீட்டிக்கப்படும் என்று சமீபத்தில் சதீஷ்கர் மாநிலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இந்த நிலையில் மதிய மந்திரி சபை கூட்டத்தில் இலவசமாக உணவு தானியம் வழங்கும் திட்டத்தை நீட்டித்து அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது .
பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் இரவு மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மாதிரி அனுராதாக்கூர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சுமார் 11 லட்சத்து 80 ஆயிரம் கோடி செலவாகும்.
SOURCE :DAILY THANTHI