Kathir News
Begin typing your search above and press return to search.

பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு!

பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர 22- ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீடித்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு!

KarthigaBy : Karthiga

  |  16 Nov 2023 10:30 AM GMT

ராபி கால பயிருக்கு பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் தமிழக விவசாயிகள் சேர்வதற்காக 15 ஆம் தேதி வரை மத்திய அரசு காலக்கெடு நிர்ணயத்து இருந்தது. ஆனால் இதில் பல விவசாயிகள் சேரவில்லை. இதுகுறித்து பல்வேறு விவசாய சங்கத்தினர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் எழுதிய கடிதத்தில் விவசாயம் செய்துள்ள ராபி கால நெற்பயிருக்கு தமிழக விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயிர் காப்பீடு செய்வதற்கு இம்மாதம் 15ஆம் தேதி கால அளவு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர் விடுமுறை வந்ததாலும் தொடர் மழையின் காரணமாகவும் விவசாயிகள் பலரால் பயிர் காப்பீடு செய்ய முடியாத சூழல் எழுந்துள்ளது. எனவே அதற்கான கால அளவை நீட்டித்து தருவதற்கு மத்திய அரசுக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்கும் தமிழக அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அதை தொடர்ந்து மத்திய அரசுக்கு தமிழக அரசு நேற்று முன்தினம் கடிதம் எழுதியது. அதில் விடுமுறைகளினாலும் மழைக்காலம் தாமதமாக தொடங்கியதாலும் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் தமிழக விவசாயிகள் சேர்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. எனவே பயிர் காப்பீடு திட்டத்தில் சேர கூடுதல் அவகாசம் வழங்குவதோடு அதில் இணைவதற்கான இணையதளத்தை செயல்பாட்டில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று தமிழக வேளாண்மை துணை ஆணையருக்கு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை கடிதம் எழுதியது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேருவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசின் கோரிக்கை கிடைக்கப்பெற்றது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அந்த திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் அந்த கோரிக்கையை ஆய்வு செய்தது. தமிழக விவசாயிகளின் நலன் கருதி அவர்களின் கோரிக்கையை ஏற்று ராபி கால நெற்பயிருக்கு பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்வதற்காக அறிவிக்கப்பட்ட 15.11.23 என்ற கால அளவை 22 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவுடுகிறது.

அதன்படி 22 ஆம் தேதி வரை தேசிய பயிர் காப்பீடு இணையதளம் திறந்திருக்கும். சிறப்பு நிகழ்வாக கருதி இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் குறிப்பிட்ட சலுகைகள் கேட்கக்கூடாது .இந்த காலத்தை பயன்படுத்தி அதிக விவசாயிகள் பயனடைவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News