தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னர் ராஜ ராஜ சோழன் 1037'வது சதய விழா - கொண்டாட்டம் கோலாகலம்
தஞ்சை பெரிய கோவிலில் மங்கல இசையுடன் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா நேற்று தொடங்கியது
By : Karthiga
தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் 10 ஆம் ஆண்டு கட்டி முடித்து குடமுழுக்கு நடத்தினார்.இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்வதோடு இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒரு நாள் மட்டும் பெரிய கோவில் வளாகத்தில் நிகழ்ச்சி நடந்தது .இந்த ஆண்டு சதய விழா இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி சதய விழா நேற்று பெரிய கோவில் வளாகத்தில் மங்கல இசை களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சதய விழாவுக்கு தலைவர் செல்வம் வரவேற்றார் .விழாவிற்கு தலைமை தாங்கிய கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது :-
நமது நாட்டை பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர் அவர்களில் சதய விழா சிறப்பாக கொண்டாடப்படுவது மாமன் ராஜராஜ சோழனுக்கு தான் என்பது பெருமையானது .ஒரு மன்னன் மக்களின் நலனை முதன்மையாக கொண்டு செயல்பட்டால் காலத்தினால் யாராலும் மறக்க முடியாது என்பதற்கு ராஜராஜ சோழன் தான் சான்று .இதற்கு களக்காட்டூர் காடன் மைந்தன் கல்வெட்டு சாட்சி. மேலும் கண்ணன் ஆரூரான் என்பவர் ராஜராஜ சோழனின் பணியாளர் ஒருவர் தான் வெட்டிய குளத்திற்கு ராஜராஜ சோழன் பெயரை வைத்துள்ளார். இத்தகைய அன்பை பெற்றவர் காலத்தினால் அழிக்க முடியாத பல பொக்கிஷங்களை தந்தார்.
ஒரு மன்னன் போரில் படைக்குப்பபின் இருந்து வழி நடத்தாமல் படைக்க முன் நின்று வழி நடத்துவதில் சிறந்தவர் ராஜராஜன் என்பதை கரந்தை செப்பேடுகள் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.சதய விழாவை ஒட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய கோவில் அருகே உள்ள பாலம் சோழன் சிலை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.